கெடா, மே 3 – நேற்று கெடாவில் கூடிய முன்னால் ஹிண்டராப் ஆதரவாளர்கள், வேதமூர்த்தி நஜிப்புடன் உறவாடிக் கொண்டிருக்கும் செயலால் மனம் புண்பட்டு, அவரது கொடும்பாவியை எரித்தனர்.
தனது சொந்த நலனுக்காக இந்தியர்களின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் வேதமூர்த்தி அடகுவைத்துவிட்டதாக ஹிண்டராப் பேச்சாளர் அசோகன் தெரிவித்தார்.
தேசியமுன்னணி மற்றும் அம்னோவுக்கு எதிராக தங்கள் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிக்காட்ட 2007 மற்றும் 2008ல், தெருவில் கூடிப்போரடிய இந்தியர்களை மறந்து அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த வேதமூர்த்தியை மன்னிக்கவே முடியாது என்று இன்று பாயாபெசாரில் கூடிய 500 எதிர்ப்பாளர்களிடையே அசோகன் கூறினார்.
வேதமூர்த்தி உண்ணாவிரதம் ஓர் அரசியல் நாடகம்-அசோகன்
பாயாபெசார் பாடாங்செராய் தொகுதிக்குட்பட்டது. இங்கு முன்னால் ஹிண்ட்ராப் வழக்கறிஞரும், தற்போதைய பிகேஆரின் துணைத்தலைவருமான சுரேந்திரன், தேசியமுன்னணி உட்பட வேறு சில வேட்பாளர்களையும் எதிர்த்து போட்டியிடுகிறார்.
வேதமூர்த்தி ஒரு சிலரைக் கூட்டிக்கொண்டு பிரதமரிடம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துகொண்டு அதற்கு இந்தியர்களின் மூன்றில் இரண்டு ஆதரவு கோரியதை எதிர்த்து, ஆத்திரமடைந்த அவருடைய சகோதரர் உதயமூர்த்தி, வேதமூர்த்தியை இயக்கத்தில் இருந்து நீக்கும் பொருட்டு அதிருப்தியாளர்களுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
இதனை மேற்கோள்காட்டிய அசோகன், அவரது உண்ணாவிரதம் ஒரு நாடகமே என்றும் அதனால் இந்தியர்களின் அனுதாபத்தைப் பெறலாம் என்று கனவு கண்டவர் அதில் தோல்வி கண்டார் என்று கூறினார்.
உண்ணாவிரதம் முடிந்த உடனே பிரதமரை சந்தித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டவர் ஒன்றை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்- இது போல பலவற்றை ம இ கா உட்பட பல இயக்கங்கள் தேசிய முன்னணி அரசிடம் கொடுத்தும் இதுவரை எவ்வித பலனுமில்லை என்று தெரிவித்த அசோகன், ஆகவே நஜிப் அரசு இந்தயர்களின் தேவைகளையெல்லாம் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டதாகச் சொல்வது முட்டாள்தனம் என்று கூறினார்.
வேதமூர்த்தி அரங்கேற்றியது நல்ல அரசியல் நாடகம் என்றும் இந்தியர்கள் அனைவரும் புரிந்துகொண்டார்கள் என்றும் அசோகன் வலியுறுத்திக் கூறினார்.
அடுத்து ஷாஆலாமின் தேசிய முன்னணி வேட்பாளர் சுல்கிப்ளியை பற்றிக்கூறிய அசோகன், “இந்தியர்களை கேவலப்படுத்தியது மட்டுமல்ல, இந்த நாடேஅவர்களுக்குச் சொந்தமில்லை, இந்தியாவுக்குச் செல்லட்டும் என்ற சொன்ன சுல்கிப்ளி, இப்போது தேர்தலுக்காக மன்னிப்புக்கேட்கிறார், அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்றும் நினைவுபடுத்தினார்.