கோலாலம்பூர், மே 3- இன்று காலையில் ஜிஞ்ஜாங் சந்தை அருகேயுள்ள ஜசெக அலுவலகத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பிகேஆர் உதவித் தலைவர்களுள் ஒருவரான தியான் சுவா தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி தியான் சுவா கூறுகையில், அவ்வெடிகுண்டுகளானது பிஸ்கட் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு யாருக்கும் எந்தவித சேதமும் நேராமல் தவிர்க்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் மலேசியா கினி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தியான் சுவா தனது சக கூட்டணி கட்சி உறுப்பினர்களான டான் செங் கியாவ் மற்றும் லிம் லிப் எங் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட ஜசெக அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, மக்களின் பாதுகாப்புக்கு எந்த வித பிரச்சனையும் இல்லையென்று உறுதியளித்துள்ளார்.
அதே சமயம், தியான் சுவா மக்கள் கூட்டணியின் கூட்டரசு பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேர்தல் ஆணையத்திற்கு சென்று, அழியா மை விவாகாரத்தை பற்றி வினவியதாகவும், ஆனால் தேர்தல் ஆணையமானது அழியா மை விவகாரத்தை பற்றி தகவல் ஏதும் தெரிவிக்க முன் வரவில்லை என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த வெடிகுண்டானது போலி வெடிகுண்டு என காவல் துறை துணைத் தலைவர் காலிட் அபு பாக்கார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.