Home நாடு கேமரன் மலை வெற்றியால் பழனிவேலு மஇகா தலைவராக சிரமமின்றி தொடர்ந்து நீடிப்பார்

கேமரன் மலை வெற்றியால் பழனிவேலு மஇகா தலைவராக சிரமமின்றி தொடர்ந்து நீடிப்பார்

553
0
SHARE
Ad

Palanivel-MIc-e1364437544713மே 6 – கேமரன் மலை தொகுதியில் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நுழையும் ம.இ.காவின் நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தொடர்ந்து தனது தலைவர் பதவியை நீடிப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஒத்தி வைக்கப்பட்ட ம.இ.கா தேசியத் தலைவருக்கான தேர்தல் இனி எந்த தருணத்திலும் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டும் மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்கவிருக்கும் பழனிவேலுவை எதிர்த்து இன்றைய சூழ்நிலையில் யாரும் போட்டியில் இறங்க மாட்டார்கள்.

தேசியத் துணைத் தலைவராக இருக்கும் டாக்டர் சுப்ரா தனது துணைத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் ஆர்வமாக இருப்பார் என்பதோடு மீண்டும் அவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதில்  எந்தவித சிக்கலும் இருக்காது.

எனவே, தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தான் மீண்டும் அமைச்சராகத் தொடர்வதில் இருக்கும் வாய்ப்பை அவர் தவறவிட மாட்டார்.

சாமிவேலு ஆதரிப்பாரா?

பொதுத் தேர்தலுக்குப் பின் டத்தோஸ்ரீ சாமிவேலு, பழனிவேலுவுக்கு எதிராக ஓர் எதிர்ப்பு முகாமை உருவாக்கி தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியை உருவாக்கலாம் என்ற ஆரூடங்களும் ஒருபுறம் நிலவி வந்தன.

ஒருவேளை சுங்கை சிப்புட் தொகுதியை மீண்டும் வென்று காட்டியிருந்தால் சாமிவேலுவுக்கு கட்சியில் ஆதரவு கூடியிருக்கும் என்பதோடு கட்சியில் அவரது ஆதிக்கமும் செல்வாக்கும் அதிகரித்திருக்கும்.

ஆனால் சுங்கை சிப்புட் தொகுதியை மீண்டும் வெல்வதில் தோல்வியடைந்துள்ளதால் சாமிவேலுவால் இனியும் பழனிவேலுவுக்கு எதிரான ஓர் சூழ்நிலையை உருவாக்குவது சிரமமாகவே இருக்கும்.

அதோடு, அவரது மகன் வேள்பாரி தற்போது ம.இ.காவின் வியூக இயக்குநராக இருப்பதோடு, மத்திய செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து பதவி வகித்து வருகின்றார்.

வரவிருக்கும் ம.இ.கா கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு நிற்பதற்கும் வேள்பாரி ஆர்வம் காட்டி வருகின்றார்.

இதனால், பழனிவேலு தலைமைத்துவத்திற்கு வேள்பாரி முழு ஆதரவு தந்து அதன் மூலம் எதிர்வரும் கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவராக வருவதையே விரும்புவார் என்றும் அதற்கு சாமிவேலுவும் பின்னணியில் இருந்து முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற அரசியல் சூழ்நிலைகளால் அடுத்து வரும் சில வாரங்களிலோ, சில மாதங்களிலோ ம.இ.கா தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும்போது பழனிவேலு மீண்டும் கட்சியின் தலைவராக எந்தவித பிரச்சனையும் இன்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.