Home அரசியல் தாப்பாவில் சரவணன் வெற்றி பெற்றதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன – பிகேஆர் வேட்பாளர் வசந்தகுமார் புகார்

தாப்பாவில் சரவணன் வெற்றி பெற்றதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன – பிகேஆர் வேட்பாளர் வசந்தகுமார் புகார்

507
0
SHARE
Ad

Vasanthakumar-Feature---2

கோலாலம்பூர், மே 8 – நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, மக்கள் கூட்டணி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.

இந்நிலையில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்ட வசந்தகுமார், வாக்குப்பெட்டிகள் காணாதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, வாக்குகள் கணக்கெடுப்பு மையத்திலிருந்து பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப் பட்டுள்ளார் என்று மலேசியா கினி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “வாக்குகள் கணக்கெடுப்பின் போது ஒரு வாக்குப் பெட்டியில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் அஞ்சல் வாக்குகள் கலந்து காணப்பட்டன. அதோடு சில வாக்குப்பெட்டிகள் இரவு 11 மணி வரை வாக்குகள் எண்ணப்பட்ட மையத்திற்கு வந்து சேரவே இல்லை.

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளித்து மீண்டும் கணக்கிடும்படி கேட்டபோது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த 8 காவல்துறையினர் என்னை தடுத்து நிறுத்தி, வெளியே சாலை வரை கொண்டுவந்து தள்ளி விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செந்தெரியாங் தொகுதியிலிருந்து 4 வாக்குப்பெட்டிகளும், ஆயர் கூனிங் தொகுதியிலிருந்து 5 வாக்குப்பெட்டிகளும் வாக்குகள் எண்ணப்படும் மையத்திற்கு கடைசி வரை வந்து சேரவில்லை என்றும் கூறியுள்ளார்.

சரவணன் என்னை மிரட்டினார்

வாக்குப்பெட்டிகள் வராதது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வசந்த குமார் முறையிட்டுக் கொண்டிருந்த போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த தாப்பா நாடாளுமன்ற தொகுதி ம.இ.கா வேட்பாளர் எம்.சரவணன், அவரை மிரட்டியதோடு அங்கிருந்த நாற்காலியையும் அவரை நோக்கி வீசி எறிந்ததாக வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினர் சரவணனை மட்டும் வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்குள் அனுமதித்ததோடு, தன்னை 50 மீட்டர் அளவிற்கு அம்மையத்தின் வாசல் வரை தள்ளிக்கொண்டே வந்தனர் என்றும் வசந்த குமார் கூறியுள்ளார்.

இறுதிவரை செந்தெரியாங் மற்றும் ஆயர் கூனிங் தொகுதிகளின் வாக்குப்பெட்டிகள் வராமலேயே, தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிட்ட சரவணன் மற்றும் அவ்விரு தொகுதிகளின் வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன என்றும் வசந்த குமார் கூறியுள்ளார்.

இரு சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகள் தான் தேசிய முன்னணி பேராக் மாநிலத்தில் வெற்றி பெறச்செய்தது

பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணி 31 தொகுதிகளையும், மக்கள் கூட்டணி 28 தொகுதிகளையும் கைப்பற்றியது. தேசிய முன்னணி பேராக் மாநிலத்தில் வெற்றி பெற தாப்பாவைச் சேர்ந்த அந்த இரு சட்டமன்ற தொகுதிகள் தான் காரணமாக அமைந்தது.

இந்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தாப்பா காவல்துறையில் தான் புகார் அளித்திருப்பதாகவும், நீதி மன்றத்தின் முன் அதற்கான  காணொளி (வீடியோ) ஆதாரங்களையும், படங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் வசந்தக்குமார் தெரிவித்துள்ளார்.