Home நாடு தே.மு.வில் ஜ.செ.க.வா? மறுக்கிறார் லிம் கிட் சியாங்

தே.மு.வில் ஜ.செ.க.வா? மறுக்கிறார் லிம் கிட் சியாங்

467
0
SHARE
Ad

Lim-Kit-Siang-2--Feature

கோலாலம்பூர், மே 10-  தேசிய முன்னணியுடன் இணைந்து செயல்படுவது குறித்து தனக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை ஏற்கப் போவதில்லை என்று ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட பல இடங்களில் சீனர்களின் ஆதரவு கிடைக்காமல் தோல்வியை சந்தித்திருக்கும் ம.சீ.ச கட்சி, அமைச்சரவையில் இருந்து விலகுவதாக முடிவெடுத்திருக்கிறது. இதனால் அதற்குப் பதிலாக அதிக இடங்களில் வெற்றி பெற்ற  ஜ.செ.க, சீனர்களின் பிரதிநிதியாக தேசிய முன்னணியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் தகவல் அமைச்சர் டான்ஸ்ரீ  சைனுடின் மைடின் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் லிம் கிட் சியாங், தேசிய முன்னணியுடன் இணையுமாறு பல்வேறு தரப்புகளிலிருந்து வரும் பரிந்துரைகளை பற்றி பரிசீலனை கூட செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான எதிர்கட்சியினரின் போராட்டங்கள் குறித்து கருத்துரைத்த லிம் கிட் சியாங், தேவையான இடங்களில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக மக்கள் கூட்டணியின் போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த புதன் கிழமை கிளானா ஜெயா அரங்கத்தில் நடைபெற்ற கருஞ்சட்டைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய 28 பேச்சாளர்களின் மீது விசாரணை மேற்கொள்ளும் விஷயத்தில் காவல்துறை திறமையாக செயல் படுவதாகவும், ஆனால் அம்னோ சார்ந்த அமைப்பான பெர்க்காசா தலைவர்கள் நாட்டில் இனவாதத்தை தூண்டும் படியான கருத்துக்களை வெளியிட்டபோது காவல்துறையின் இந்த திறைமை எங்கே போனது என்றும் கேள்வியெழுப்பி உள்ளார்.

ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி மைக்கல் இயோவும், தேசிய முன்னணி கூட்டணியை விரிவுபடுத்தி ஜ.செ.க, பிகேஆர், பாஸ் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.