மே 11 – மலேசிய காவல் துறை (போலீஸ்) தலைவர் டான்ஸ்ரீ இஸ்மாயில் ஓமாரின் பதவிக் காலம் எதிர்வரும் மே 17ஆம் தேதியோடு நிறைவடைகின்றது.
கடந்த சில தினங்களாக அவர் ராஜினாமா செய்யப் போகின்றார் என்ற வதந்திகள் சமூக வலைத் தளங்களில் உலவி வந்தன. ஆனால், அவர் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படாது என்றும் புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
காவல் துறையின் பேச்சாளர் ரம்லி முகமட் யூசோப் விடுத்த அறிக்கையொன்றில் இஸ்மாயில் ஓமாரின் அதிகாரபூர்வ வழியனுப்பு விழா அடுத்த வியாழக்கிழமை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசியல் கட்சிகளின் நெருக்குதலால் காவல் துறை தலைவர் பதவி விலகுகின்றார் எனக்கூறப்படுவது தீய உள்நோக்கத்தோடு, காவல் துறையை அவமதிப்பது போன்ற செயல் என்றும் அந்த அறிக்கையில் ரம்லி கூறியுள்ளார்.
மேலும் காவல் துறையின் தலைமையகம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்றது என்பதையும் ரம்லி மறுத்துள்ளார். புக்கிட் அமான் என்ற அதன் தலைமையகத்தின் அர்த்தத்தைப் போலவே காவல் துறையின் அலுவலகம் எப்போதும் போல் அமைதியாகவே இருக்கின்றது என்றும் ரம்லி தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
“தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும், தேச நிந்தனைப் பேச்சுக்களைப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் மீதும் 1998ஆம் ஆண்டின் பல்ஊடக சட்டம் 233வது விதியின் படியும், குற்றவியல் சட்டம் 500வது விதியின் படியும், தேசநிந்தனைச் சட்டம் 4(1)வது விதியின் படியும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டி ரம்லி எச்சரித்தார்.
பதவி விலகும் இஸ்மாயில் ஓமார் நாட்டின் ஒன்பதாவது காவல் துறை தலைவராவார் (ஐஜிபி). செப்டம்பர் 2010ஆம் ஆண்டில் அவர் அப்போதைய காவல் துறை தலைவர் மூசா ஹாசானிடம் இருந்து பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
காவல் துறையின் நடப்பு துணைத் தலைவர் காலிட் அபு பாக்கார் அடுத்த காவல் துறை தலைவராகப் பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.