சென்னை, மே 16- டாஸ்மாக்’ மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து தே.மு.தி.க., – எம்.எல்.ஏ.,க்களுடன், கட்சி தலைவர் விஜயகாந்த் திடீர் ஆலோசனை நடத்தினார்.
மின்வெட்டு மற்றும் பின்னலாடை தொழில் பாதிப்பை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் சமீபத்தில் திருப்பூரில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் விஜயகாந்த் பேசுகையில், “டாஸ்மாக் மதுக்கடைகளால், பலரும் பாதிக்கப்படுகின்றனர். “மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் குடிப்பவர்கள் வாக்கு நமக்கு கிடைக்காது’ என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அவ்வாறு போராடாமல் போனால் குடிப்பவர்களின் தாலியை சுமந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு நாம் துரோகம் இழைத்ததாக ஆகிடும்.
முதல்வரின் பெயரை பயன்படுத்தி, “அம்மா திட்டம், தாய் திட்டம், அம்மா உணவகம்’ என, திறக்கப்படுகிறது. எந்த திட்டத்தை எடுத்தாலும் இவ்வாறு செய்கின்றனர்.
அதேபோல அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் முதல்வர் பெயரை வைக்க வேண்டும்’ என்றார்.