புதுடெல்லி, மே 18- இந்திய தொழிலாளர்கள் மாநாட்டின் 45வது அமர்வை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள தொழிற்சங்கங்கள் அவ்வப்போது எழுப்பி வரும் பிரச்சினைகளை இந்த அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது.
சமீபத்தில், நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட கடையடைப்பின்போது எழுப்பப்பட்ட கோரிக்கைகளில் சிலவற்றை ஒதுக்கி தள்ளிவிட முடியாது.
பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கான புதிய சட்டங்களை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இவற்றை நிறைவேற்றும் முறை தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கு இடையில் கருத்து வேற்றுமைகள் தோன்றாதவாறு அவர்களுடன் கலந்து பேசி புதிய முடிவு எடுக்கப்படும்.
தேசிய அளவில் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் அரசு ஆலோசித்து வருகிறது.
2004ம் ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியமைத்த போது தொழிலாளர் நலனுக்காக பாடுபடுவோம் என்று உறுதியளித்திருந்தோம். அவை மெல்ல மெல்ல நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாநாட்டில் நான் அளித்த உறுதிமொழிகளில் பல இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளதை எண்ணி நான் திருப்தியடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.