Home கருத்தாய்வு வேதமூர்த்தியால் ஆட்சிக் குழு பதவி பெற்ற கணபதி ராவ்!

வேதமூர்த்தியால் ஆட்சிக் குழு பதவி பெற்ற கணபதி ராவ்!

1039
0
SHARE
Ad

KLANGமே 31 – நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியலில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டாக்டர் சேவியர் ஜெயகுமார் மீண்டும் ஆட்சிக் குழு உறுப்பினராக இடம் பெறாதது, நாடு முழுமையிலும், குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

#TamilSchoolmychoice

கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாகவே கடமையாற்றியதோடு, பலதரப்பட்ட மக்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்றவர் சேவியர் ஜெயகுமார்.

குறிப்பாக, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூட பல சந்தர்ப்பங்களில் சேவியர் ஜெயகுமாரின் சேவைகளைப் பற்றிப் பாராட்டிப் பேசியிருக்கின்றார்.

ஆனால் சேவியர் விடுபட்டதனால் பிகேஆர் கட்சியிலும் குமுறல்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன.

சுவாராம் தலைவர் கா.ஆறுமுகம் அன்வார் இப்ராகிம் மீது கண்டனம்.

சுவாராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவரும், பொதுத் தேர்தல் காலத்தில் மக்கள் கூட்டணியோடு நெருக்கம் பாராட்டியவருமான வழக்கறிஞர் கா.ஆறுமுகம் கூட சிறப்பாக செயல்பட்ட சேவியர் மீண்டும் நியமனம் செய்யப்படாததால் தற்போது பிகேஆர் கட்சியிலேயே இந்தியர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு, தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்களை ஒன்று திரட்டி அன்வார் இப்ராகிமோடு இந்தியர் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை செம்பருத்தி சார்பாக நடத்தியவர் கா.ஆறுமுகம்.

இந்தியர்களுக்கு இரண்டு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் வழங்குவதாக அன்வார் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இப்போது பிகேஆர் கட்சி சார்பாக ஒருவர் கூட இல்லலை என்றும் கா.ஆறுமுகம் அன்வாரைக் குறை கூறியுள்ளார்.

ஏன் இந்த மாற்றம்?

முதலில், கணபதி ராவ் சட்டமன்ற அவைத் தலைவராக நியமிக்கப்படப்போகின்றார் என்றுதான் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி தேசிய முன்னணி அரசாங்கத்தில் துணையமைச்சராகவே நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் கூட்டணியும் ஹிண்ட்ராப் இயக்கம் மீதிலான தங்களின் அணுகுமுறையையும், நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதற்காக, மக்கள் கூட்டணிக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு கணபதி ராவ்.

வேதமூர்த்தி துணையமைச்சராக நியமிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில் மற்றொரு ஹிண்ட்ராப் போராட்டவாதியும், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்ற 5 ஹிண்ட்ராப் போராட்டவாதிகளில் ஒருவருமான கணபதி ராவை சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிப்பதன் மூலம் தங்கள் பக்கமும் ஹிண்ட்ராப் போராட்டவாதிகள் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் நல்லதொரு வாய்ப்பு மக்கள் கூட்டணிக்கு கிடைத்திருக்கின்றது.

ந்த அரசியல் வியூகத்தை செயல்படுத்துவதற்காக பலியானவர்தான் சேவியர் ஜெயகுமார்1

நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில் சிறை சென்ற மற்றொரு ஹிண்ட்ராப் போராட்டவாதியான ஹிண்ட்ராப்பின் வசந்தகுமார் தாப்பாவில் போட்டியிட்டாலும் அவர் சரவணனிடம் தோல்வியடைந்தார்.

மற்றொரு முக்கிய ஹிண்ட்ராப் தலைவரும் வேதமூர்த்தியின் சகோதரருமான உதயகுமாரோ மக்கள் கூட்டணியோடு எதிர்ப்புப் போக்கையே கையாண்டு வந்தார்.

மனோகரன் மலையாளத்திற்கு ஏனோ சில காரணங்களால் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கிடைத்த ஒரே ஹிண்ட்ராப் தலைவர் கணபதி ராவ்தான்!

இந்நிலையில், மக்கள் கூட்டணி தரப்புக்கு தற்போது கிடைத்திருக்கும்  ஒரே ஹிண்ட்ராப் தலைவர், கோத்தா ஆலாம் ஷா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கணபதி ராவ்தான்!

அவரை சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராக முன்னிறுத்துவதன் மூலம், ஹிண்ட்ராப் ஆதரவாளர்களிடையே தங்களின் செல்வாக்கு சரிந்து விடாமல் நிலைநிறுத்திக் கொள்ள முடியும் எனக் கணக்குப் போட்ட மக்கள் கூட்டணி தலைவர்கள், அதன் மூலம் ஏற்கனவே ம.இ.காவிலிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் எதிர்ப்புகளை சந்தித்து வரும்  வேதமூர்த்தியின் வளர்ச்சியையும், ஆதிக்கத்தையும் குறைக்க முடியும் என்றும் முடிவு செய்திருக்கின்றனர்.

அதன் விளைவாகத்தான், ஹிண்ட்ராப் பின்னணி இல்லாத சேவியருக்கு பதிலாக, ஹிண்ட்ராப் பின்னணியைக் கொண்ட போராட்டவாதியான கணபதிக்கு சிலாங்கூர் ஆட்சிக் குழு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என சிலாங்கூர் மாநில பிகேஆர் வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே, தெரிந்தோ தெரியாமலோ, மறைமுகமாகவோ, இன்றைக்கு கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினராக பதவியில் அமர பின்னணியில் வேதமூர்த்தியின் துணையமைச்சர் நியமனமும், ஹிண்ட்ராப் பின்னணியும் இருந்திருக்கின்றது.