Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் ஆணையத்தை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம் – நஜிப் முடிவுக்கு அம்பிகா எதிர்ப்பு

தேர்தல் ஆணையத்தை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம் – நஜிப் முடிவுக்கு அம்பிகா எதிர்ப்பு

562
0
SHARE
Ad

Ambiga-Sliderஜூன் 2 – தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் பெருகி வரும் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அந்த ஆணையத்தை கண்காணிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அதில் தேசிய முன்னணி உறுப்பினர்களும், எதிர் கட்சி உறுப்பினர்களும் இடம் பெறுவர் என்றும் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மாமன்னருக்கு விசுவாச உரையாற்றியபோது நஜிப் இந்த அறிவிப்பைச் செய்தார்.

இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையும் பொதுத் தேர்தல் மீதான மரியாதையும் பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

அம்பிகா எதிர்ப்பு

இருப்பினும் சிறப்புக் குழு அமைப்பதால் எந்தவிதப் பயனும் இருக்காது என்றும் தற்போதைய தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் அனைவரும் பதவி விலகுவதுதான் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரே செயலாக இருக்கும் என்றும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நஜிப்பின் அறிவிப்பின் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பறிபோய்விட்டது என்பதை அவரே ஒப்புக் கொள்வது போல் உள்ளது என்றும் அம்பிகா கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தை கண்காணிக்க மற்றொரு குழுவை நியமிப்பதும் நாட்டின் அரசியல் சட்ட அமைப்புக்கு முரணானது, காரணம் அரசியல் அமைப்பின் படி தேர்தல் ஆணையம் சுதந்திரமாக யாருடைய கண்காணிப்பும் இன்றி செயல்பட வேண்டிய ஓர் அமைப்பு என்றும் அம்பிகா சுட்டிக் காட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்திற்கு இணையான ஒன்று என்றும் அந்த ஆணையம் ஒரு சாதாரண அரசாங்க இலாகாவைப் போல் நடந்து கொள்ளவும் கூடாது, நடத்தப்படவும் கூடாது என்றும் அம்பிகா கூறினார்.

“தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்துவதற்கு ஒரே வழி, அந்த ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் விலக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும், நம்பிக்கையும் கொண்டவர்களை நியமிப்பதுதான்” என்றும் அவர் மேலும் கூறினார்.

“தேர்தல் ஆணையத் தலைவரும், துணைத் தலைவரும் பதவி விலக வேண்டும்” – கிட் சியாங் அறைகூவல்

இதே போன்றதொரு கருத்தையே ஜசெக தலைவரான லிம் கிட் சியாங் பிரதிபலித்துள்ளார்.

“நஜிப்பின் அறிவிப்பு சரியான பாதையில் அவர் செல்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. இருப்பினும் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசிசும், அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஓமாரும் உடனடியாக பதவி விலக வேண்டும். காரணம் அவர்கள்  தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் போலவும் அரசியல்வாதிகள் போலவும் நடந்து கொண்டு மக்கள் கூட்டணி தலைவர்களுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்” என்று லிம் கிட் சியாங் கூறினார்.

இதற்கிடையில், அமைக்கப்படும் புதிய கண்காணிப்புக் குழுவில் அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கின்றது.