Home நாடு “11 நாட்களில் 3 மரணங்கள் – இனியும் தாமதிக்காமல் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும்” –...

“11 நாட்களில் 3 மரணங்கள் – இனியும் தாமதிக்காமல் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும்” – ஜசெக குலசேகரன்

433
0
SHARE
Ad

Kula-DAP-Sliderஜூன் 3 – 11 நாட்களுக்குள் 3 காவல்துறை தடுப்புக் காவல் மரணங்களைச் சந்தித்துள்ள பிரதமர் நஜிப்பின் அரசாங்கத்தில் இனியும் துணையமைச்சராக உட்கார்ந்து கொண்டு வேதமூர்த்தி என்ன செய்யப் போகின்றார், அவர் உடனடியாக பதவி விலகுவதே சிறந்தது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலுக்கு முன்பாக வேதமூர்த்தி தரப்பிலான ஹிண்ட்ராப் பிரிவினர் சமர்ப்பித்த ஆறு அம்சங்களில் ஒன்று காவல் துறை மரணங்களை நிறுத்த வேண்டும் என்பதாகும்.

ஆனால் இந்த அம்சத்திற்கு ஒப்புக் கொள்ளாத நஜிப் இந்த அம்சத்தையும், இனரீதியாக சலுகை வழங்கும் மற்றொரு அம்சத்தையும் ரத்து செய்துவிட்டு மற்ற நான்கு அம்சங்களைக் கொண்ட கோரிக்கையில் மட்டும் தேசிய முன்னணியை கையெழுத்திடச் செய்தார்.

அதன் பின்னரே, வேதமூர்த்தி தரப்பு தேசிய முன்னணிக்கு தனது ஆதரவை வழங்கியது.

“இப்போது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. காவல் துறை தடுப்புக் காவலில் மூன்று மரணங்கள் 11 நாட்களில் நடந்ததை வைத்துப் பார்க்கும்போது ஏன் பிரதமர் நஜிப் காவல் துறை மரணங்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவிசாய்த்து ஹிண்ட்ராப் மகஜரில் கையெழுத்திடவில்லை என்று இப்பொது தெரிகின்றது” என்றும் குலசேகரன் கூறினார்.

இதுவரை 2,000 ஆண்டு முதல் 219 பேர் காவல் துறையில் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்துள்ளார்கள். இதில் பெரும்பாலும் இந்தியர்கள் என்பதால், இந்திய சமுதாயத்தில் கொதிப்பும் குமுறலும் ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த 11 நாட்களில் காவல் துறை தடுப்புக் காவலில் மரணமடைந்த 3 பேரும் இந்தியர்கள் என்பது, இந்திய சமுதாயத்தின் இன்றைய அவல நிலையைக் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

“காவல் துறை மரணங்களுக்காகப் போராடி வந்த ஹிண்ட்ராப்பின் பிரதிநிதியாக இப்போது நஜிப் அமைச்சரவையில் அமர்ந்திருப்பவர் வேதமூர்த்திதான். அவரது நியமனம் கூட சர்ச்சைக்குரியதுதான். அவர் இதுவரை செனட்டராகவும் நியமிக்கப்படவும் இல்லை. இனியும் துணையமைச்சர் பதவியில் தொங்கிக் கொண்டு அவரால் எதையும் மறைக்க முடியாது. இந்தியர்களின் நலன்களை விற்று, துணையமைச்சர் பதவியை அடைந்திருக்கும் வேதமூர்த்திக்கு வெட்கம் இருந்தால், அவர் உடனடியாக இந்திய சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் குலசேகரன் காட்டமாக கூறியுள்ளார்.