கோலாலம்பூர், ஜூன் 5 – தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணமுற்றதில் சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகள் மீது இன்று நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஜப்ரி ஜாப்பார் (வயது 44), முகம்மட் நஹார் அப்துல் ரஹ்மான் (வயது 45), முகம்மட் ஹஸ்வாதி ஜம்ரி ஷாரி (வயது 32) ஆகிய மூவரும் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குறித்து எதிர் வாதம் செய்யவில்லை.
இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நான்காவது அதிகாரி இன்னும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் அவர் மீதும் குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கப்படலாம்.
ஆயுதமேந்தி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்ததாகத் தெரியவந்தது.