ஜூன் 7 – ஹிண்ட்ராப் இயக்கத்தின் சார்பாக ஒரே நோக்கத்திற்காக இரண்டு சகோதரர்களும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், ஒருவரை துணையமைச்சராக்கி விட்டு இன்னொருவர் மீது அதே நடவடிக்கைக்காக குற்றம் சாட்டி சிறைக்கு அனுப்பியிருக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் அணுகுமுறையை ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் சாடியுள்ளார்.
“தேச நிந்தனை குற்றச்சாட்டில் ஹிண்ட்ராப் உதயகுமாருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகபட்சமானதாக பக்காத்தான் கருதுகிறது. மலேசியாவில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையும், நீதி, ஆள் பார்த்து வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிருபிப்பதாகவே உள்ளது” என்றும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சேவியர் கூறியுள்ளார்.
பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் சேவியர் ஜெயகுமார் தொடர்ந்து கூறியிருப்பதாவது:-
“கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிட்டிஷ் பிரதமருக்கு எழுதிய கடிதம் தொடர்பில் தண்டிக்க வேண்டும் என்றால் பலர் அதுகுறித்து விசாரணை செய்யப்பட வேண்டும். குறிப்பாக அவரின் சகோதரர் வேதமூர்த்தி மீது எந்த விசாரணையும் செய்யாத நிலையில், அவருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கிக் கௌரவிக்கும் பொழுது இவருக்குச் சிறை தண்டனை வழங்கியிருப்பது, இந்நாட்டின் நீதித்துறை தலைவர் அம்னோவின் கைப்பாவையாகச் செயல்படுவதை மக்களுக்கு உணர்த்துகிறது”.
மற்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
“இதே சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய பலர் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்குப் பிரதமர் பதவி முதல் நாடாளுமன்ற \ சட்டமன்ற உறுப்பினர் பதவிகளும் பல கௌரவ விருதுகளும் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களில் முதன்மையானவர் துன் டாக்டர் மகாதீர் என்பது நாடு அறியும்”.
“அதே குற்றத்தில் தண்டிக்கப்பட வேண்டிய இப்ராஹிம் அலி மற்றும் சூல்கிப்ளி நோர்டினுக்கு நாடாளுமன்ற இடங்கள் வழங்கி அவர்களைக் கௌரவப் படுத்தியுள்ள பாரிசான் அரசு, இத்தனை காலம் கடத்தி பொதுத்தேர்தல் முடிந்தபின் ஹிண்ட்ராப் உதயகுமாருக்கு வழங்கியுள்ள தண்டனை கடுமையான விமர்சனத்துக்கான செயலாகும்”
“சட்டத்துறை தலைவர் நினைத்தால் ஹிண்ட்ராப் உதயகுமாருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம், அவ்வாறு செய்யப்படவும் வேண்டும்” என கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.