கோலாலம்பூர், ஜூன் 7 – தேச நிந்தனை குற்றத்திற்காக இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் நிறுவனர் உதயகுமாருக்கு, ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தெரிவித்துள்ளார்.
“உதயகுமார் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு சர்சைக்குரிய கடிதத்தை எழுதியதற்காக, கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி 514 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும் தற்போது இரண்டாவது முறையாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் உதயகுமார் ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமா?” என்றும் தியான் சுவா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஹிண்ட்ராப் இயக்கத்திற்கு தெற்கு ஆசியாவில் உள்ள தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதாக காவல்துறையும், அரசாங்கமும் அறிவித்தனர். அதோடு அரசாங்கத்திற்கு எதிராக இந்திய மக்களை தூண்டுவதாகவும் ஹிண்ட்ராப் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உதயகுமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை கடுமையானது என்றும் தியான் சுவா தெரிவித்துள்ளார்.
அதோடு கடந்த 1948 ஆண்டு உருவாக்கப்பட்ட தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றுவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக், தான் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும் தியான் சுவா குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுத்தேர்தலில் பத்து நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தியான் சுவாவின் மீது இரண்டு தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
அவற்றில் லகாட் டத்து ஊடுருவல் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டது முதலாவதாகவும், தேர்தல் முறைகேடுகள் தொடர்பாகக் கடந்த மே 13 ஆம் தேதி நடந்த கருத்தரங்கில் கருத்து தெரிவித்தது இரண்டாவது குற்றச்சாட்டாகவும் உள்ளது.