ஜூன் 11- புது தில்லி தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில் “பவர் ஸ்டார்’ சீனிவாசனை தில்லி போலீஸார் சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனர்.
தொழிலை மேம்படுத்துவதற்காக புது தில்லியை சேர்ந்த ‘புளு கோஸ்ட் இன்ஃப்ராஸ்டக்சர்’ நிறுவனத்தின் நிர்வாகி, பவர் ஸ்டார் சீனிவாசனிடம் ரூ. 1,000 கோடி கடன் பெற்றுத்தர கோரியுள்ளார்.
இதன்படி முன்பணமாக ரூ. 5 கோடியை 2010-ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட சீனிவாசன், இதுவரை கடன் பெற்றுத் தரவில்லை என்று கூறப்படுகிறது.
முன்பணமாக கொடுத்த ரூ. 5 கோடியையும் சீனிவாசன் திருப்பித் தரவில்லையாம். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்த விசாரணையில் சீனிவாசன் மேலும் பலரிடம் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்களிடம் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த வழக்குகளில் பவர் ஸ்டார் சீனிவாசனை தமிழக போலீஸார் ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.