ஜூன் 11 – 13வது நாடாளுமன்றம் இந்த மாத இறுதியில் கூடும்போது அதன் சபாநாயகராக டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா மீண்டும் நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்பு பிரதமர் துறை அமைச்சராகப் பணியாற்றிய பண்டிகார் 2008ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றி வருகின்றார்.
இந்த முறை நாடாளுமன்ற சபாநாயகரின் பணி முன்பை விட சவாலானதாக இருக்கும். காரணம், தற்போது முன்பை விட அதிகமாக எதிர் கட்சி உறுப்பினர்கள் 89 பேர் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருக்கின்றார்கள்.
ஆளும் கட்சியான தேசிய முன்னணிக்கோ 133 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
ஜூன் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவிருக்கின்றது. இந்த புதிய நாடாளுமன்றத்திற்கான விளக்கக் கூட்டத்தை எதிர் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தகவல் துறை அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் பெயரும் அடுத்த சபாநாயகர் பதவிக்கு அடிபடுகின்றது.
எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த ஆறு மாதத்திற்குள் பதவி ஏற்காவிட்டால் அவர்கள் இயல்பாகவே பதவி இழப்பார்கள் என்று சபாநாயகராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் பண்டிகார் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.