புதுடெல்லி, ஜூன் 12- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த் அங்கீத் சவான், அஜித் சண்டிலா மற்றும் தரகர்கள் மீது கடந்த மாதம் 16-ம் தேதி டெல்லி சிறப்பு படை போலீசார் குற்றச்சாட்டு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் மீது பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு ஸ்ரீசாந்தும், அங்கீத் சவானும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 27 நாட்களுக்கு பிறகு திகார் சிறையிலிருந்து நேற்று ஜாமினில் வெளியில் வந்த ஸ்ரீசாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்ரீசாந்த் கூறியதாவது:-
நடந்த மோசமான சம்பவங்களை மறப்பதற்கு விரும்பவில்லை. இது எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். நான் எப்பொழுதும் மிக சரியாகவே விளையாடி வந்து இருக்கிறேன். என் உடல், உயிர் எல்லாவற்றையும் கிரிக்கெட்டுக்கே கொடுத்தேன்.
நீதிமன்றம், இந்திய நீதிமன்ற அமைப்புகளை நான் முழுமையாக நம்புகிறேன். இதுதான் நான் சொல்வது எல்லாம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன்.
நான் இப்போது மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும் இருக்கிறேன். கடவுள் எனக்கு கருணை காட்டி இருக்கிறார். நாம் முதலாவதாக கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். பிறகு எனது ரசிகர்கள், குடும்பம், நண்பர்கள் ஆகியோருக்கு.
எனது கெட்ட காலத்தில் வக்கீல்களும், எனது நலன் விரும்பிகளும் உடன் இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.