சென்னை, மே 15 – ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட கேரள மாநில கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் புதிய தமிழ் திரைப்படம் ஒன்றில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்படும் ‘அன்புள்ள அழகே’ என்ற படத்திற்கு ஸ்ரீசாந்த் பாடல்களை எழுத உள்ளார். இவரது மைத்துனரான மது பாலகிருஷ்ணன் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாட உள்ளார். மேலும், ஒரு கௌரவ வேடத்திலும் அவர் இந்தப் படத்தில் தோன்றுகின்றார்.
இதற்கிடையில் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மும்பையில் பயிற்சி பெற்று வருவதாகத் தெரிகின்றது. ‘ஜலக் திக்லா ஜா’ என்ற போட்டி நிகழ்ச்சியில் நடன இயக்குனரும், நடனக் கலைஞருமான சினேகா கபூருடன் இணைந்து ஆட உள்ளார் என்று அவருடைய சகோதரரும், நிர்வாகியுமான டிபுசாந்த் தெரிவித்தார்.
ஏற்கனவே ஷாருக்கானுடன் இணைந்து ஆடிய நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீசாந்த் தன்னுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், புரப் கோலி, சுக்விந்தர் சிங், சோபி சௌத்ரி போன்றோருடன் இணையும்போது இது அவருக்கு ஒரு கடினமான நிகழ்ச்சியாக இருக்கும். மாதுரி தீட்சித், கரன் ஜோகர் மற்றும் ரெமோ டிசோசா ஆகியோர் நீதிபதிகளாக இருக்கும் இந்நிகழ்ச்சியை நடிகர் ரன்வீர் ஷோரி நடத்த உள்ளார்.