கோலாலம்பூர், ஜூன் 13 – நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் மசீச பின்னடைவு காரணமாக, அரசாங்கப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என்று அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்த நாளில் இருந்தே, அக்கட்சி வட்டாரங்களில் அவரது முடிவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன.
சுவா சொய் லெக் பதவி விலக வேண்டும் என்று கூறி ம.சீ.ச கிளைகளைச் சேர்ந்த பலர் அவருக்கு எதிராகப் போர்கொடி தூக்கினர்.
இந்நிலையில் மசீச கட்சியின் உதவித் தலைவர் டோனால்ட் லிம், “சுவா எடுத்த முடிவு மிகவும் தவறானது. அவரை எதிர்த்து கருத்து கூற மத்திய செயற் குழு உறுப்பினர்களுக்குத் துணிவு இல்லை. எனவே தனது முடிவு தவறு என்று சுவா ஒப்புக்கொண்டு, உடனடியாக அவசரப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதாக ‘தி எட்ஜ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
லிம் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுவா சொய் லெக், “13 ஆவது பொதுத்தேர்தலில் மசீச, கடந்த தேர்தலை விட மோசமான முடிவுகளைச் சந்தித்தால், எந்த ஒரு அரசாங்கப் பதவிகளையும் ஏற்கப்போவதில்லை என்று லிம் உட்பட மசீச வின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற்ற கட்சி தலைமைக் குழு கூட்டத்தின் போதும், அதே வருடம் ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெற்ற மத்திய செயற் குழு கூட்டத்தின் போதும், அதன் பின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தின் போதும் இம்முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டங்கள் அனைத்திலும் லிம் கலந்து கொண்டார். ஆனால் கூட்டங்களுக்கு தாமதமாக வந்து முன்கூட்டியே சென்று விடுவது தான் அவரது வழக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “எனது முடிவு தவறு என்றால், அவசரக் கூட்டத்துக்கு அவரே அழைப்பு விடுக்கலாம். அதோடு லிம்முடன் பொது விவாதம் நடத்தவும் நான் தயார்” என்று சுவா சொய் லெக் தெரிவித்துள்ளார்.