கோலாலம்பூர், ஜூன் 13 – பேராக் மாநிலத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பக்காத்தான் தொடுத்துள்ள வழக்குகளில், முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராம் பக்காத்தான் சார்பாக வாதாடுவார் என்று பாஸ் மத்திய செயற் குழு உறுப்பினர் முகமட் ஹனிபா (படம்) தெரிவித்துள்ளார்.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக இருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு தனது பதவியிலிருந்து பெற்றவர் ஸ்ரீராம் (வயது 60).
நீதிபதி பதவி ஏற்பதற்கு முன் வழக்கறிஞராக இருந்த அவர், பின் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின் கடந்த 2009 ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதிபதியாக இருந்த போது ஸ்ரீராம் அளித்த தீர்ப்புகள் மிகவும் பிரபலமானவை என்பதோடு இன்றுவரை பலராலும் மேற்கோள் காட்டப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பாசிர் பாஞ்சாங், மஞ்சோய், லுபுக் மெர்பாவ், ருங்குப், செலாமா, மானோங் ஆகிய தொகுதிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி பாஸ் கட்சி தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் பக்காத்தான் சார்பாக ஸ்ரீராம் வாதாடுவார் என்ற செய்தி தற்போது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறையீட்டில் பக்காத்தான் வெற்றி பெற்றால் அதன்வழி நடைபெறும் மறு தேர்தல்களில் பக்காத்தான் வெற்றி பெற்றால் பேராக் மாநிலத்தில் அரசாங்கமே மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.