இஸ்லாமாபாத், ஜூன் 14 – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், சுய ஆட்சி கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்தியவர் அக்பர் பக்டி. கடந்த 2006ம் ஆண்டில், ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், அக்பர் பக்டி ஆதரவாளர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில், அக்பர் பக்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு முஷாரப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருந்த முஷாரப் சமீபத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தாய்நாடு திரும்பினார். இந்நிலையில், பெனாசிர் கொலை வழக்கு, ராணுவப் புரட்சியின் போது நீதிபதிகளை காவலில் வைத்தது, அக்பர் பக்டி கொலை வழக்கு என்று வரிசையாக அவர் மீதான வழக்குகளை நீதிமன்றங்கள் துரிதப்படுத்தின. அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.
நீதிபதிகளை காவலில் வைத்த வழக்கில் அவரை கைது செய்ய பெஷாவர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள முஷாரப்பின் பண்ணை வீட்டையே, துணைச் சிறைச்சாலையாக அறிவித்து அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அக்பர் பக்டி கொலை வழக்கில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை பெஷாவர் உயர் நீதிமன்றத்தின் தீவிரவாத தடுப்பு அமர்வு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து குவெட்டா நகர போலீசார் இஸ்லாமாபாத் பண்ணை வீட்டுக்கு சென்று முஷாரப்பை கைது செய்வதாக கூறி அதற்கான ஆணையை அளித்தனர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து முஷாரப், பண்ணை வீட்டிலேயே காவலில் வைக்கப்படுவார் .