Home நாடு பத்துமலை கேபிள் கார் திட்டம் தொடரும் – கணபதிராவ் உறுதி

பத்துமலை கேபிள் கார் திட்டம் தொடரும் – கணபதிராவ் உறுதி

693
0
SHARE
Ad

KLANGஷா ஆலம், ஜூன் 15 – பத்துமலை ஆலய ‘கேபிள் கார்’ அமைக்கும் திட்டம் எந்த ஒரு தடையும் இன்றி தொடரும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், கோத்தா ஆலம் ஷா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.கணபதிராவ் உறுதியளித்துள்ளார்.

நேற்று மிட்லண்ட் தோட்ட ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த கணபதிராவ்,“பத்துமலை கேபிள் கார் திட்டம் தங்கு தடையின்றித் தொடரும். இவ்விவகாரத்தில் செலாயாங் நகராண்மைக்கழகம் முறையான அங்கீகாரம் வழங்கி உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதோடு பொதுமக்கள் இவ்விவகாரம் குறித்து பயப்படவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பத்துமலை ஆலய வளாகத்திற்குள் நிறுவப்பட்டுள்ள 42.7 மீட்டர் உயர முருகன் சிலை உட்பட, அங்குள்ள பல்வேறு கட்டிடங்கள் யாவும் முன் அனுமதி இன்றி சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ளன என்றும், ஆலய வளாகத்திற்குள் உள்ள அந்த கட்டிடங்களின் வரைபடங்களை ஆலய நிர்வாகம் சமர்ப்பிக்கத் தவறியதால் கேபிள் கார் பணிக்கு தடை உத்தரவு பிறப்பிப்பதாகவும் நேற்று செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவித்தது.

“செலாயாங் நகராண்மைக் கழகத்தால் அங்கீகரிக்கப்படாத பல கட்டிடங்கள் பத்துமலை ஆலய வளாகத்திற்குள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 42.7 மீட்டர் உயரம் கொண்ட முருகன் சிலையும் அடங்கும். எனவே இவ்விவகாரத்திற்கு தீர்வு காண மாநில அரசு 6 மாத காலம் அவகாசம் அளித்துள்ளது.கேபிள் கார் திட்டத்திற்கு தடை உத்தரவு நீங்க வேண்டுமானால், சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டிடங்களின் வரைபடங்களை ஆலய நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் அசிஸி முகமட் சாயின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கேபிள் கார் திட்டம் குறித்தும், பத்துமலை வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் அடுத்த வாரம் தேவஸ்தானம் விரிவான விளக்கம் ஒன்றை வழங்கும் என்று அதன் தலைவர் டத்தோ ஆர். நடராஜா தனது பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் குறித்து பொதுமக்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.