Home இந்தியா இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது: மன்மோகன் சிங் உறுதி

இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது: மன்மோகன் சிங் உறுதி

527
0
SHARE
Ad

புது தில்லி, ஜூன் 19- இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது’ என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

manmohaசம்பந்தன் தலைமையில் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வன் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், பொன் செல்வராசா ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லிக்கு வந்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை செவ்வாய்க்கிழமை மாலை தனித்தனியாகச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் அவர்கள் பேச்சு நடத்தினர்.

#TamilSchoolmychoice

பின்னர் “தினமணி’ செய்தியாளரிடம் சம்பந்தன் கூறியதாவது:

இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அரசியல் சாசன 13-ஆவது சட்டத் திருத்தத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

அதை தடுத்து நிறுத்த இந்தியா விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இலங்கையில் தமிழ் இனம் அழிந்துவிடும்.

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை. இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இலங்கையில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இருவரிடமும் எடுத்துரைத்தோம்.

அதைக் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங், “இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம். அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களுக்கு அநீதி நடைபெறுவதை இந்தியா அனுமதிக்காது’ என்று உறுதியளித்தார்.

அவரது வாக்குறுதிகள் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இலங்கை செல்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில், 13-ஆவது சட்டத் திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றம் தொடர்பாக இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பேச்சவார்த்தையில் தமிழ் தேசியக் கூட்டணி கலந்து கொள்ளாது என்று சம்பந்தன் கூறினார்.

புதன்கிழமை மாலை இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டணியினர் அதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.