Home இந்தியா இலங்கையில் 13-வது அரசியல் சட்ட திருத்தம்: பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி

இலங்கையில் 13-வது அரசியல் சட்ட திருத்தம்: பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி

523
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன் 19- பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அப்போது சிங்கள அரசு மீது மன்மோகன்சிங் அதிருப்தி தெரிவித்தார்.

manmohanஇலங்கை தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகள் குழு, கடந்த 16–ந் தேதி இந்தியாவுக்கு வந்தது.

ஆர்.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான அக்குழுவில் எம்.பி.க்கள் மாவை சேனாதிராஜா, கே.சுரேஷ் பிரேமச்சந்திரன், பி.செல்வராஜா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

அக்குழுவினர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர். அப்போது, தமிழர் பகுதியான வடக்கு மாகாணசபைக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் வரும் நிலையில், மாகாணசபைகளுக்கான அதிகாரத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில், 13–வது அரசியல் சட்ட திருத்தத்தில் மாற்றம் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு மன்மோகன் சிங் அதிருப்தி தெரிவித்தார்.

இந்த செயல், தனக்கு கலக்கம் ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதாக இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசு அளித்த வாக்குறுதி மீது சந்தேகம் ஏற்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக பிரதமர் கூறினார்.

இலங்கை அரசு அமைத்த ‘படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின்’ சிபாரிசுகளுக்கு கூட இந்த நடவடிக்கை முரணாக அமைந்திருப்பதாக பிரதமர் கூறினார். எனவே, மாகாணங்களுக்கான அதிகார பகிர்வு அடிப்படையில் அரசியல் தீர்வு காணுமாறு அவர் இலங்கை அரசை கேட்டுக்கொண்டார்.

தமிழ் சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் நலன்கள் குறித்து, தான் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார். தமிழ் மக்கள் சம அந்தஸ்து பெற்ற குடிமக்களாக, கவுரவமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி, சுயமரியாதை ஆகியவை நிறைந்த எதிர்காலம் அமைய இந்தியா முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரையும் தமிழ் எம்.பி.க்கள் குழு சந்தித்து பேசியது.