சென்னை, ஜூன் 20 – தமிழக திட்டங்களுக்கு நீண்டகால கடன் வழங்க வேண்டும் என்று ஜப்பான் நிறுவனத்திடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முனையத்தின் தலைவர் அகிஹிகோ தனாகா, முதல்வர் ஜெயலலிதாவை நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து ஜெயலலிதா கூறுகையில்,“கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முனையம், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களில் உதவி செய்து வருகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாடு மாற்று முறை மின்பெருக்கத் திட்டம், ரூ.3,410 கோடி கடனுதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளது.இதன்மூலம் மேலும் 6,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
மேலும் மாநில நெடுஞ்சாலை மேம்பாடு திட்டம், நகர்புற கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலை திட்டம் போன்றவைகளுக்கு, வரும் நிதியாண்டில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முனையம் நிதி உதவி செய்ய உள்ளது.
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 தொடர்பான சட்ட விதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்திய ஐ.நா அறிக்கையில் பொதுத்துறை, தனியார் ஒருங்கிணைப்பு திட்டங்களில், தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு நீண்டகால கடன் வசதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.