கோலாலம்பூர், ஜூன் 20 – ஆட்சி மாற்றம் வேண்டி அடுத்த 5 ஆண்டுகள் வரை எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் உட்பட, பலர் காத்திருக்கலாம். ஆனால் மலேசிய மக்கள் அதுவரை பொறுமை காக்க மாட்டார்கள் என்று பிகேஆர் உதவித்தலைவர் தியான் சுவா மலேசியாகினி செய்தி இணைய தளத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளார்.
அதே நேரத்தில்,“அடுத்த 5 ஆண்டுகாலம் வரை நாட்டின் பொருளாதாரம் தாக்குபிடிக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. மலேசிய மக்கள் உடனடியான மாற்றத்தையே விரும்புகின்றனர். இந்தப் போராட்டம் அன்வார் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக அல்ல. ஜனநாயகத்தை சீர்திருத்திக்கொள்ள மலேசிய மக்களுக்கு கிடைத்திருந்த கடைசி சந்தர்ப்பம் தான் இந்த 13 வது பொதுத்தேர்தல்” என்று தியான் சுவா குறிப்பிட்டுள்ளார்.
“சார்பற்ற ஊடகங்கள், தலைமைத்துவ மாற்றங்கள், நியாயமான நீதித்துறை, ஊழல் இல்லாத நாடு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் அடிப்படை ஜனநாயக மாற்றங்கள் தேவை. நமக்குப் பின்னால் இருந்த அண்டை நாடுகள் யாவும் இவ்விவகாரங்களில் நமக்கு முன்னே சென்று விட்டன. ஆனால் நாம் இன்னும் முதல் அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை” என்றும் தியான் சுவா தெரிவித்துள்ளார்.
மேலும், இன்னும் 5 ஆண்டுகளில் தேசிய முன்னணியில் விரிசல்கள் விழுந்து அது பலவீனமடைந்துவிடும் என்றும், அப்போது பக்காத்தான் மேலும் வலுவடைந்திருக்கும் என்றும் தியான் சுவா கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்கட்சிகள் ஆட்சியமைத்தால் அன்வார் தான் பிரதமராவார். நாட்டை வழிநடத்திச் செல்ல அவரைத் தவிர ஒரு சிறந்த தலைவர் யாரும் இல்லை என்று தியான் சுவா தெரிவித்துள்ளார்.