ஜூன் 20 – எதிர்வரும் ஜூன் 22ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் 505 கறுப்புப் பேரணியை மெர்டேக்கா அரங்கில் அல்லது தித்திவாங்சா அரங்கில் நடத்திக் கொள்ளுங்கள் என கோலாலம்பூர் டத்தோ பண்டார் அகமட் பெசால் தாலிப் விடுத்துள்ள கோரிக்கையை மக்கள் கூட்டணி நிராகரிப்பதாக பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரபிசி ரம்லி (படம்) அறிவித்துள்ளார்.
அந்த பேரணி பாடாங் மெர்போக் திடலில்தான் நடைபெறும் என ரபிசி உறுதியாகக் கூறினார்.
மக்கள் கூட்டணி தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்தால், அதனைக் கையாள வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு என, கோலாலம்பூர் மாநகரசபையின் தகவல் ஊடக அதிகாரி ஹாசான் அபு பாக்கார் கூறியுள்ளார்.
பாடாங் மெர்போக் திடலைப் பயன்படுத்த ஒலிம்பிக் மன்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், ஜூன் 22ஆம் தேதி அந்த திடலை மக்கள் கூட்டணியினர் பயன்படுத்த முடியாது என மாநகரசபை ஏற்கனவே மறுப்பு தெரிவித்துவிட்டது.
எனவே, இனியும் அவர்கள் அந்த திடலைப் பயன்படுத்தினால், அந்த பேரணி சட்டவிரோதப் பேரணியாகக் கருதப்படும் என்றும் அதன் பின்விளைவுகளை காவல் துறைதான் கையாள வேண்டும் என்றும் ஹாசான் கூறியுள்ளார்.
இருப்பினும் இன்றைய இறுதிநேரத் தகவல்களின்படி பாடாங் மெர்போக்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் ஓட்டம், புகைமூட்ட வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் ஓட்டம் உண்மையிலேயே நடைபெறவிருந்த ஒரு நிகழ்வா அல்லது கறுப்புப் பேரணியை நடத்தப்படவிடாமல் இருக்க அரசு நெருக்குதலால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்வா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்போது ஒலிம்பிக் ஓட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 505 கறுப்பு பேரணி இனி மெர்போக் திடலில் நடைபெற பிரச்சனை ஏதும் இருக்காது என்ற கருத்தும் நிலவுகின்றது.