கோலாலம்பூர், ஜூன் 24 – இன்று காலை நடைபெற்ற 13 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தில், 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் முதலிலும், அவரைத் தொடர்ந்து துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இரண்டாவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
அதன் பின்னர் தேசிய முன்னணியைச் சேர்ந்த 133 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நஜிப் தலைமையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், அவரைத் தொடர்ந்து எதிர்கட்சியைச் சேர்ந்த 89 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பில், 133 வாக்குகள் பெற்று பண்டிகார் மீண்டும் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளார். மேலும் தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோ ரொனால்ட் கியாண்டி மற்றும் டத்தோ இஸ்மாயில் முகமட் சாயித் ஆகியோர் துணை சபாநாயகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கூட்டணியின் சார்பாக முன்மொழியப்பட்ட வேட்பாளரான முன்னாள் கூட்டரசு நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் 89 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.
நாடாளுமன்ற கூட்டம் இன்று மதியம் 1.04 மணியோடு நிறைவடைந்தது. அதோடு 13 வது நாடாளுமன்றம் நாளை பேரரசரால் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவுள்ளது.