கோலாலம்பூர், ஜூன் 25 – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு மரணத்திற்கும், அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் துன் ரசாக்கிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அசிலா ஹட்ரி மற்றும் காவல்துறை அதிரடிப்படை அதிகாரி சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அந்த விசாரணையில், குற்றவாளிகளை விடுவிக்கக் கோரி அவர்களது வழக்கறிஞர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, பொதுத் துணை சட்ட ஆலோசகர் (III) துன் அப்துல் மஸ்ஜித் ஹம்சா, “இக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியான காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் அசிலா ஹட்ரி, ‘தனது செயலுக்கு தானே பொறுப்பு’ என்று ஒப்புக்கொண்டுள்ளார். எனவே இதில் நஜிப்புக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை” என்று நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் “அரசியல் ஆய்வாளரான அப்துல் ரசாக் பகிண்டா என்பவர், இக்கொலைக்கு உடந்தையாக இருந்தார். அவர் நஜிப்புக்கு அறிமுகமானவர்” என்பதையும் அரசு வழக்கறிஞர் மன்றத்தில் 5 ஆவது இடத்தில் இருக்கும் அப்துல் மஜித் ஒப்புக்கொண்டார்.
“அதோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மூசா சாப்ரி, நஜிப்பின் பாதுகாப்பு அதிகாரிகளுள் ஒருவர். எனவே அப்துல் ரசாக்கும், மூசாவும் அப்போதைய துணைப்பிரதமர் நஜிப்புடன் பணியாற்றினர் என்பதற்காக, எல்லா காரணங்களையும் நஜிப்பை நோக்கி திருப்பக்கூடாது” என்று அப்துல் மஸ்ஜித் ஹம்சா தெரிவித்துள்ளார்.
“அப்துல் ரசாக் செய்த குற்றத்திற்காக, அப்போது துணைப்பிரதமராக இருந்த நஜிப்பை இதில் தொடர்பு படுத்தக்கூடாது” என்று அப்துல் மஸ்ஜித் ஹம்சா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.