பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4 – கார் பலகை எண் “WWW 1″ தொடர்பில் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக முன்னாள் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ நிஸார் ஜமாலுதீன் தொடுத்த வழக்கில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு இழப்பீடாக உத்துசான் மலேசியா 250,000 ரிங்கிட் தரவேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நிஸாரின் வழக்கறிஞரான பிர்ட்ரி அஸ்முன் உறுதிப்படுத்தியுள்ளார். அதோடு வழக்கு செலவுக்காக 30,000 ரிங்கிட்டும் தரவேண்டும் என்று நீதிபதி ரோஸ்னைனி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நிஸார் பற்றிய அவதூறான கட்டுரையை வெளியிட்டதற்கு, உத்துசான் மலேசியா நாளிழ் செய்தியாளரின் கவனக்குறைவாக இருக்கலாம் அல்லது அவர் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் அதை எழுதியிருக்கலாம் என்று நீதிபதி ரோஸ்னைனி தெரிவித்துள்ளார்.
“அந்த செய்தியாளர் அந்த கட்டுரையை எழுதுவதற்கு முன் அது பற்றிய உண்மையான தகவலைக் கண்டறிந்திருக்க வேண்டும். எனவே இது தவறான நோக்கத்தோடு எழுதப்பட்ட கட்டுரை என்று கருதப்படுகிறது” என்றும் நீதிபதி ரோஸ்னைனி குறிப்பிட்டுள்ளார்.