பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8 – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீனுக்கு நேற்றைய நாள் மிகவும் கடினமானதாக அமைந்துவிட்டது. காரணம் தற்போது நடந்து வரும் சுக்மா விளையாட்டுப் போட்டியில், நேற்று ஒரே நாளில் 3 விதமான பிரச்சனைகளை அவர் எதிர்நோக்க வேண்டியிருந்தது.
நேற்றைய நாளின் தொடக்கத்திலேயே கைரிக்கு ஒரு கெட்ட செய்தி வந்தது, பண்டார் உத்தமாவில் என்.டி.வி 7 ஏற்பாட்டில் நடைபெற்ற தொண்டு நிறுவனங்களுக்கான ஒட்டத்தில், கார் ஒன்று புகுந்து, விளையாட்டாளர்களை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் 3 பெண் விளையாட்டாளர்கள் காயமுற்றனர்.
அவர்களை மோதித் தள்ளிய சிவப்பு நிற புரோட்டான் ஈஸ்வரா ரக காரை ஓட்டிய அந்த நபரை, உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் சரணடையுமாறு கைரி தனது டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்தார். பிறகு மதியம் 1.30 மணியளவில், அந்த காரின் பதிவு எண்ணை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு, அத்தகவலை அனைவரும் பகிருமாறு கைரி வேண்டுகோள் விடுத்தார்.
அச்சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டமொன்றை ஏற்பாடு செய்த கைரி, சுக்மா விளையாட்டில் கலந்து கொண்ட பெண் விளையாட்டாளர் ஒருவரை சக விளையாட்டாளர்கள் மூவர் கற்பழித்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
19 வயதுடைய அந்த பெண், தான் கடந்த ஜூலை 3 ஆம் தேதி, புத்ரா பல்கலைக்கழகத்திலுள்ள விளையாட்டாளர்கள் தங்கும் அறையில் வைத்து கற்பழிக்கப்பட்டதாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே செய்தியாளர் கூட்டத்தில் மற்றொரு சம்பவத்தைப் பற்றியும் கைரி கூறினார், விளையாட்டில் கலந்து கொள்ள வந்த வீரர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் கூடைப்பந்து மைதானத்தில் மது அருந்திக் கொண்டிருந்த போது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கைரி கூறினார்.