Home நாடு அவசரகால சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு முன்னரே குற்றச்செயல்களின் விகிதம் அதிகரித்திருந்தது – டோனி புவா

அவசரகால சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு முன்னரே குற்றச்செயல்களின் விகிதம் அதிகரித்திருந்தது – டோனி புவா

793
0
SHARE
Ad

TONY-PUAகோலாலம்பூர், ஜூலை 9 –  அவசரகால சட்டம் (Emergency Ordinance) நீக்கப்படுவதற்கு முன்னரே, நாட்டில் குற்றச் செயல்களின் விகிதம் அதிகரித்திருந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல் இருக்கும் போது, அச்சட்டம் நீக்கப்பட்டது தான் குற்றச்செயல்கள் அதிகரித்ததற்குக் காரணம் என்று எப்படி கூற முடியும் என்று  பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா  கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டது தான் என்று அரசாங்கமும், காவல்துறையும் கூறி வருகின்றன.”

“அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டதால் காவல்துறையால் சந்தேகிக்கப்படும் நபரை தடுப்புக் காவலில் வைக்க முடியாது. எனவே தங்களால் சந்தேகப்படும் நபரை கைது செய்ய முடியவில்லை, அவர்கள் தைரியமாக வெளியே சுற்றுகின்றனர். இதன் காரணமாக தான் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன என்றும் காவல்துறை புலம்பி வருகிறது”என்று டோனி புவா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “இப்போது அவர்களுக்கு என்ன பிரச்சனை?, அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டது தான் குற்றச்செயல்கள் அதிகரித்ததற்குக் காரணமா? அல்லது குற்றங்களைக் கையாள்வதில் காவல்துறையின் திறமையின்மையை மூடி மறைப்பதற்கு ஏதுவாக இருந்த ஒரு சட்டம் நீக்கப்பட்டுவிட்டதே என்ற கவலையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசிய குற்றச்செயல் அளவீட்டின் அடிப்படையில் பார்த்தால், கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை குற்றங்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

அதன்படி, 2004 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை குற்றங்களின் விகிதம் 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அந்த சமயத்தில் காவல்துறையின் வசம் அவசரகால சட்டம் நடைமுறையில் தான் இருந்தது. அப்படி இருந்தும் அவர்களால் குற்றச்செயல்களை தடுக்க முடியவில்லை என்று டோனி புவா கூறியுள்ளார்.