கோலாலம்பூர், ஜூலை 16 – கறுப்பு ‘505’ பேரணிகளை நடத்த பக்காத்தான் அண்டை நாடுகளிடமிருந்து நிதி வாங்கியதாக அவதூறான செய்தி வெளியிட்ட ‘பெரித்தா ஹரியான்’ நாளிதழ் மீது வழக்கு தொடுக்கப்போவதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
முன்னாள் இந்தோனேசிய அதிபர் ஜூசோப் கல்லாவின் அறிக்கை என்று கூறி, ‘பெரித்தா ஹரியான்’ நாளிதழ் வெளியிட்ட அந்த செய்தியை, தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டுவதால், தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அன்வார் கூறியுள்ளார்.
மேலும், தான் அப்படி ஒரு அறிக்கையை வெளியிடவில்லை என்று ஜூசோப் கல்லா தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது வாசித்துக் காண்பித்தார்.
இதற்கு முன்னர், அன்வார் அண்டை நாடுகளிடமிருந்து நிதி உதவி பெற்றுள்ளதாகக் கூறப்படுவது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினார்களா என்று கெப்பளா பத்தாஸ் தொகுதி தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரீஸால் மெரிக்கான் நைனா மரிக்கான், உள்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.