ஜோகன்னஸ்பர்க், ஜூலை 17- தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினத் தலைவரும், இனவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு அந்நாட்டின் அதிபராக உயர்வு பெற்ற நெல்சன் மண்டேலாவின் வரும் 18ம் தேதி பிறந்த நாள் ஆகும்.
உயிர் காக்கும் சாதனங்களின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாளை உலகளாவிய அளவில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பொது வாழ்க்கையில் நெல்சன் மண்டேலாவின் 67 ஆண்டு கால தொண்டினை போற்றும் விதமாக 67 நிமிடங்களை பொதுப்பணிக்கு செலவிட உள்ளேன் என இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார்.
மண்டேலா பிறந்த ஊரில் வரும் 18ம் தேதி அவரது பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு அறிவியல் பள்ளி திறக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பள்ளிகளுக்கு அன்று வர்ணம் பூசவும், ஏழை குழந்தைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 17 நகரங்களில் நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க இசை கலைஞர்கள் மெல்போர்ன் நகரில் மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தனது வாழ்நாளில் 46 ஆண்டுகளை சிறை தண்டனையில் கழித்த மண்டேலா 2010ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக நெல்சன் மண்டேலா கடந்த மாதம் 8ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை மோசமாகவே, உயிர் காப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன.
இதனிடையில் மண்டேலா குடும்பத்தினரின் கல்லறைப் பிரச்சினைகள் நீதிமன்றம் வரை சென்றன. அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக மண்டேலா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.
பின்னர், அரசும், அவரது மனைவி மற்றும் நண்பர்கள் அனைவரும் இதற்கு மறுப்பு அறிக்கையும் விடுத்தனர். பொதுமக்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 6 வாரங்கள் கடந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. அவரது மனைவியும் அதனை ஆமோதித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா முழுவதும் இருக்கும் பள்ளிக் குழந்தைகள் ஒரே நேரத்தில் அவரை வாழ்த்தி ‘ஹேப்பி பேர்த் டே டூ யூ..’ என இசைக்க உள்ளனர்.