Home கலை உலகம் ‘மரியான்’ – திரை விமர்சனம்

‘மரியான்’ – திரை விமர்சனம்

769
0
SHARE
Ad

13470_thumb_665

ஜூலை 19 –  ‘மரியான்’ – திரை விமர்சனம்

கதாநாயகன்   – தனுஷ்

#TamilSchoolmychoice

கதாநாயகி      – பார்வதி

இயக்கம்          –  பரத்பாலா

இசை                – இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு   – மார்க் கொனிக்ஸ்

————————————————————————–

Mariyan-Superhit-Songs-Posterமரியான் – சாகாவரம் பெற்றவன் இது தான் படத்தின் கதை சுருக்கம்.

காதல் ஒரு மனிதனை எப்படிப்பட்ட துன்பத்தில் இருந்தும் காப்பாற்றிவிடும் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் பரத் பாலா என்ற அறிமுக இயக்குனர். இத்தனை வருட தமிழ் சினிமாவில் காதலை வைத்து என்னென்னவோ சாகசங்களை செய்து காட்டியிருக்கிறார்கள் இயக்குனர்கள் பலர். அந்த வகையில்,தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய ஒரு சாமான்யன் தன் காதல் தரும் பலத்தால் அவர்களிடமிருந்து தப்பித்து, எப்படி தன் காதலியுடன் சேர்கிறான் என்பது தான் கதை! புதுசா ஒன்னும்   இல்லைங்க!

ஆப்பிரிக்காவில் தொடங்கும் படம் அப்படியே முதல் பாதி முழுவதும் இந்தியாவில் உள்ள ஒரு கடலோர கிராமத்தை சுற்றி நகர்கிறது. தன்னை கடலுக்கே அரசன் என்று கூறி கொண்டு ஒரு கர்வத்தோடு அந்த ஊரை சுற்றி வலம் வரும் ஒரு மீனவ இளைஞன் தான் மரியான். அவனை துரத்தி துரத்தி காதலிக்கும் அதே மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்ணாக ‘பூ’ படத்தில் நடித்த பார்வதி.

கரடுமுரடான தனுஷை ஒரு தலைப்பட்சமாக காதலிக்கும் பார்வதிக்கு, அவளது காதலுக்கு உதவி செய்கிறார் தனுஷின் நண்பரான அப்புக்குட்டி. அவ்வப்போது தனுஷுடன் மது அருந்தும் காட்சிகளில் மட்டும் வந்து போகிறார் தனுஸின் இன்னொரு நண்பரான ‘சொல்லுங்க அண்ணே சொல்லுங்க’ புகழ் இமாம் அண்ணாச்சி.கதையில் பார்வதியை கிறக்கத்தோடு பார்த்துக் கொண்டே அவ்வபோது ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கும் ஒரு வில்லன் கதாப்பாத்திரம். மற்றபடி, அதே கடலோர கிராமம், கடல் அலை, மாதா கோயில், மீன் பிடிக்கும் தொழில் இது தான் முதல் பாதி.

தனுஷின் அம்மாவாக வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார் உமா ரியாஸ். ஏன் இந்த வேண்டாத வேலை உமா? ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் அநேக கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்தவர் கமலா காமேஷ் (உமா ரியாஸின் அம்மா). மிக இளம் வயதில் நடிக்க வந்தாலும் அவருக்கு தமிழ் சினிமா அம்மா வேடத்தைத் தவிர வேறு கதாப்பாத்திரங்களைத் தர யோசித்தது. இதை கமலா காமேஷே சில தொலைக்காட்சி நேர்காணல்களில் வருத்ததுடன் கூறியிருக்கிறார். இனி தமிழ் சினிமா, கமலா காமேஷின் இடத்தை உமா ரியாஸுக்கு  ஒதுக்காமல் இருந்தால் சரி.

காதலை சொல்ல வரும் பார்வதியை கல்லை விட்டு எறிந்து விரட்டும் அளவிற்கு கரடு முரடானவரான தனுஷுக்கும் ஒரு கட்டத்தில் காதல் வருகிறது. தனது ஊரையும், கடலையும் தவிர வேறு எதன் மீதும் ஈடுபாடு இல்லாதவரான தனுஷ்,காதலியின் தந்தை வாங்கிய கடனை அடைக்க ஆப்பிரிக்க நாடான சூடானுக்கு கட்டிட வேலைக்கு செல்கிறார்.

அங்கு இரண்டு ஆண்டுகள் கடினமான வேலை செய்து, ஒப்பந்தம் முடிந்து ஊருக்கு திரும்ப மிகுந்த ஆவலோடு இருக்கும் போது, தனுஷும் அவரோடு உடன் வேலை செய்யும் நண்பரான ஜெகன் (அயன் படத்தில் சூர்யாவின் நண்பர்) தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார்கள்.

அதன் பிறகு அவர்களுக்கு என்ன நேர்ந்தது? தனுஷும்,ஜெகனும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்தார்களா? இல்லையா?, பார்வதியின் காதல் வெற்றி பெற்றதா? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் இரண்டாம் பாதி!

படத்திற்கு பலம் சேர்ப்பவை Mariyaan-New-Movie-Stills-19

படத்திற்கு பக்கபலமாக இருப்பது தனுஷின் நடிப்பும், பார்வதியின் அழகும், ஏ.ஆர் ரஹ்மானின் இசையும் தான்.

தனுஷை துரத்தி துரத்தி காதலிக்கும் போதும், காதல் காட்சிகளில் தனுஷின் மேல் சாய்ந்து முகத்தோடு முகம் புதைத்து வெட்கப்படும் போதும், தனது வசீகரப் பார்வையால் தனுஷை கிறங்க வைப்பதிலும் ஈர்க்கிறார் பார்வதி. மரியானுக்குப் பிறகு பார்வதியை இனி அதிகப் படங்களில் பார்க்கலாம்.

கடந்த சில வருடங்களாக, தனுஷின் பன்முக திறமை பல படங்களில் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. நடிப்போடு சேர்ந்து தான் நடிக்கும் படங்களில் பாடுவது, பாடல் எழுதுவது, அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றார் போல் வசனங்களை உச்சரிப்பது என்று தனுஷ் வாழ்கிறார். மரியான் படத்திலும் தனது முக பாவனைகள் மற்றும் வசன உச்சரிப்புகளில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

ஆனால் காதல் கொண்டேன் முதல் மரியான் வரை எல்லா படங்களிலும் அவரது முகத்தில் ஒரு வித ‘சைக்கோ’ களை தெரிவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

“ஓய ஓய்யல”, “எங்க போன ராசா”, “நெஞ்சே எழு”, “கடல் ராசா நான்” போன்ற பாடல்கள் மனதில் நிற்கின்றன.

imagesபடத்தின் பலவீனம்

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற கதாநாயகன் (தனுஷ்),  பிலிம்பேர் விருது பெற்ற கதாநாயகி(பார்வதி), தேசிய விருது பெற்ற குணசித்திர நடிகர் (அப்புக்குட்டி – அழகர்சாமியின் குதிரை), அதையெல்லாம் விட ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்  ஏ.ஆர் ரஹ்மான் இப்படி ஒரு பலமான கூட்டணி இருந்தும் கூட, திரைக்கதையில் வீரியம் இல்லாததால் ‘மரியான்’ ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.

ஐரோப்பாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான மார்க் கொனிக்ஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தும், காட்சிகளில் பிரம்மாண்டம் இல்லை. கடலை மையமாக கொண்ட ஒரு கதையில் அதற்கான மெய்சிலிர்க்கும் காட்சியமைப்புகள் தேவை அல்லவா?

ஒளிப்பதிவாளருக்கு அதற்கான வாய்ப்புகள் இருந்தும் கடல் காட்சிகளிலும், ஆப்பிரிக்க பாலைவனத்திலும் அப்படிப்பட்ட காட்சிகளைக் காட்டத் தவறி விட்டார் என்றே தோன்றுகிறது.

ஒரு காட்சியில், நண்பர் இறந்த சோகத்தில் இருக்கும் தனுஷை, ஆறுதல் சொல்ல வரும் காதலியை கழுதை உதைப்பது போல் உதைப்பதும், கண்டபடி அடிப்பதும் பார்பதற்கு கொஞ்சம் எரிச்சலாகத் தான் இருக்கிறது.

கதை விறுவிறுப்பு இன்றி மெதுவாக நகர்கிறது. அதை பார்க்கும் ரசிகர்களுக்கு தான் அதிகம் பொறுமை தேவை. அப்படியே சில காட்சிகளில் விறுவிறுப்பு கூடினாலும் இடையிடையே வரும் காதல் பாடல்கள் அதை வேகத்தடை போல் குறைத்துவிடுகிறது.

மொத்தத்தில்  ‘மரியான்’ ரசிகர்களின் மனதில் ஒருமுறை மட்டுமே உயிர் வாழ்வான்…

– பீனிக்ஸ்தாசன்

இந்த படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணையத் தொடர்பின் வழி காணலாம்.

please install flash