கோலாலம்பூர், ஜூலை 24 – குளியல் அறைக்கு அருகில் சிற்றுண்டி சாலை அமைத்தது இனம் அல்லது மதம் சார்ந்த பிரச்சனை அல்ல என்று துணை கல்வித்துறை அமைச்சர் (II) பி.கமலநாதன் இன்று கூறியுள்ளார்.
எஸ்கே ஸ்ரீ ப்ரிஸ்தானா பள்ளியில் உள்ள சிற்றுண்டி சாலையைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமலநாதன், “இது இனம் அல்லது மதம் சார்ந்த பிரச்சனை அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மார்ச் முதல் சிற்றுண்டி சாலையை குளியல் அறைக்கு அருகில் தற்காலிகமாக அமைத்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். காரணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் சிற்றுண்டி சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மார்ச் முதல் சிற்றுண்டி சாலை, தற்காலிகமாக குளியல் அறைக்கு அருகில் இயங்கி வருவது பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழகத்திற்கு தெரியும் என்றும், இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பே, இவ்விவகாரம் குறித்து கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது என்றும் கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.