கோலாலம்பூர், ஜூலை 26 – சுங்கை பூலோவிலுள்ள எஸ்.கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியில் குளியலறைக்கு அருகே தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்த விவகாரத்தில், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் 1948 ன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று சிலாங்கூர் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த புகைப்படங்கள் நாட்டில் பல கருத்து வேறுபாடுகளையும், இனப்பிரச்சனைகளையும் தூண்டியுள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் ஏ.தெய்வீகன் தெரிவித்துள்ளார்.
ரம்லான் மாதம் காரணமாக, எஸ்.கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியில் பள்ளியில் இஸ்லாம் அல்லாத மாணவர்கள் குளியல் அறைக்கு அருகில் உணவருந்துவது போன்ற புகைப்படங்கள் முகநூல், டிவிட்டர் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குளியல் அறைக்கு அருகிலும், கழிவறைக்கு அருகிலும் தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்து அங்கு தான் உணவருந்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் அக்குழந்தைகளைக் கட்டாயப்படுத்தியதாக கூறப்பட்டது.
ஆனால், அந்த பள்ளியில் சிற்றுண்டி சாலையை புதுப்பிக்கும் பணி நடந்து வருவதால் தான், பள்ளி நிர்வாகம் தற்காலிகமாக உணவருந்தும் இடத்தை மாற்றியிருப்பதாக கல்வி துணையமைச்சர் கமலநாதன் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், அந்த பள்ளியின் தலைமையாசிரியர் தான் மிகவும் அவதூறாகப் பேசப்பட்டதாகவும், பலர் தன்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இழிவு படுத்துவதாகவும் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவருக்கு சிலாங்கூர் கல்வித்துறை ஒரு வாரம் அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.