ஈப்போ, ஜூலை 26 – வயது குறைந்த பிள்ளைகளை பெற்றோர்களின் அனுமதியின்றி மத மாற்றம் செய்வது முரணான செயல் என்றும், அப்பா அல்லது அம்மா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் அனுமதியின்றி 18 வயதிற்குக் குறைவான பிள்ளைகளை மதமாற்றம் செய்யக்கூடாது என்று இந்திரா காந்தி வழக்கில் ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி சோங் சிவி கிம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
பாலர் பள்ளியின் ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் மு.இந்திராகாந்தி (வயது 37), தனது பிள்ளைகளை தனது அனுமதியின்றி அவரது கணவர் மதமாற்றம் செய்துள்ளார் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்திராகாந்தியின் கணவர் பத்மநாதன் கடந்த 2009 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவினார். அதன் பின்னர் தனது பிள்ளைகளான தேவிதர்ஷினி(வயது 16), கரண் டினிஷ் (வயது 15) மற்றும் பிரசன்னா டிக்ஷா (வயது 4) ஆகியோரை தாயாருக்குத் தெரியாமல் இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், “மதமாற்றம் தொடர்பான kalimah syahadah (இஸ்லாத்தை தழுவுவதற்கான அறிவிப்பு) செய்யப்படாததால் இந்த பிள்ளைகளின் மதம் மாற்றம் முறையான நடவடிக்கை இல்லை” என்று நீதிபதி சிவி செங் கூறினார்.
அத்துடன் “இந்த முடிவு யாருக்கும் வெற்றி அல்ல. நாம் நல்லிணக்கத்துடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று சுமார் ஒன்றரை மணிநேரம் பல்வேறு வழக்குகளை உதாரணம் காட்டி தனது தீர்ப்பை நீதிபதி வெளியிட்டார்.