ஐதராபாத், ஆக. 1– ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்த ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி பல வழிகளில் முயற்சி செய்தார்.
ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி தெலுங்கானாவை சோனியா காந்தி உருவாக்கியுள்ளார்.
மத்திய அரசின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்த முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி பதவி விலக திட்டமிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமரசம் செய்ததன் பேரில் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை ஆந்திரா சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டியதுள்ளது. இந்த நடவடிக்கைக்கு முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
கிரண்குமாரும், ஆந்திரா காங்கிரஸ் மந்திரிகளும் ஏதேனும் எதிர்ப்பு செயல்களில் ஈடுபட்டால், அவர்களை ஓரம் கட்டிவிட்டு, ஆந்திராவில் புதிய தலைமையை கொண்டு வர காங்கிரஸ் தலைவர் சோனியா திட்ட மிட்டுள்ளார். மேலும் ஆந்திராவில் உள்ள சாதி அரசியலையும் காங்கிரசுக்கு சாதகமாக திருப்ப சோனியா ஆலோசித்து வருகிறார்.
பிரிக்கப்பட்ட ஆந்திராவில் கபு சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிரஞ்சீவி இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்.
எனவே சிரஞ்சீவியை ஆந்திராவின் புதிய முதல்–மந்திரி ஆக்குவதன் மூலம் கபு சமுதாயத்தின் ஓட்டுக்களை கவர முடியும் என்று சோனியா நினைக்கிறார். சோனியாவின் இந்த அதிரடி திட்டத்தை அறிந்து முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரிக்கப்பட்ட ஆந்திராவில் மொத்த 25 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளில் கபு சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். மற்ற 9 தொகுதிகளிலும் அவர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
கபு இனத்தவருக்கு அடுத்த படியாக, பிரிக்கப்பட்ட ஆந்திராவில் கம்மா இனத்தவர்கள் கணிசமான அளவுக்கு உள்ளனர். கம்மா இன மக்கள் பாரம்பரியமாக தெலுங்கு தேசம் கட்சிக்கே வாக்களித்து வருகிறார்கள்.
அடுத்த தேர்தலில் சிரஞ்சீவியை முதல்–மந்திரி வேட்பாளராக நிறுத்தும் பட்சத்தில் கபு மற்றும் கம்மா இன மக்களிடம் நேரடி போட்டி உருவாகும். இதனால் கபு இனத்தவர்கள் ஓட்டு காங்கிரசுக்கு கிடைக்கும் என்று வியூகம் வகுக்கப்படுகிறது.
ஏற்கனவே தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சியை சேர்த்து தெலுங்கானாவில் வலுவாக கால் ஊன்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பிரிக்கப்பட்ட ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திர பாபுநாயுடு இருவரையும் வீழ்த்த சிரஞ்சீவியை முன் நிறுத்துகிறார்கள்.
சோனியாவின் இந்த திட்டத்தால் தெலுங்கானா, ஆந்திரா இரண்டிலும் காங்கிரசுக்கு பலம் கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.