ஹராரே, ஆக. 3– ஜிம்பாப்வே நாட்டில் புதிய அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.
அதில் ஷானு பி.எப்.கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே ( வயது 89), ஜனநாயக மாற்றத்துக்காண இயக்கம் (எம்.டி.சி.) கட்சி சார்பில் பிரதமர் மோர்கன் டிஸ்வான்கிரை (வயது 61) உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர்.
நேற்று முன்தினம் வாக்கு பதிவு முடிந்ததும் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அதை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 210 தொகுதிகளுக்கான வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் அதிபர் முகாபேயின் ஷானு பி.எப். கட்சி 137 இடங்களில் வெற்றி பெற்றது. அதாவது மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த தகவலை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எனவே, அதற்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், இந்த முடிவை எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்தின் கட்சி வேட்பாளரும், பிரதமருமான மோர்கன் டிஸ்வான்கிரை ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை.
வாக்காளர்களை நிர்பந்தப்படுத்தி தங்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சியினர் வாக்கு போட வற்புறுத்தப்பட்டுள்ளனர். எனவே, இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஜிம்பாப்வேயில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.