கோலாலம்பூர், ஆகஸ்ட் 6- கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஏ.ஆர் ரஹ்மான் மசூதியில் அமைதிப்பேரணி நடத்தியதற்காக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 3 இளைஞர் பிரிவுத் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நஸ்ரி முகமட் யூனுஸ் (வயது 29), சம்சுல் இஸ்கண்டார் யூஸ்ரே (வயது 38) மற்றும் கைரி அனுவார் அகமட் ஸைனுதீன் (வயது 36) ஆகிய மூவரும் இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
தடைசெய்யப்பட்ட இடத்தில் ஒன்று கூடிய குற்றத்திற்காக சட்டப்பிரிவு 4(2) ன் படி அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்ததால், 2000 ரிங்கிட் சொந்த உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி மேலாண்மைக்கும், விசாரணை வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியும் நடைபெறவிருப்பதாக நீதிமன்ற நீதிபதி மாட் கனி அப்துல்லா அறிவித்தார்.