கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – குற்றத்தடுப்பு ஆர்வலர் சஞ்சீவனின் தந்தையான ராமகிருஷ்ணன் தன் மகன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணையை நெகிரி செம்பிலான் காவல்துறையில் இருந்து கோலாலம்பூர் தலைமையகத்திற்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி நெகிரி செம்பிலானின் வைத்து இந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவம் நடைபெற்றதால், இவ்வழக்கை பாகாவ் காவல்நிலையம் மற்றும் சிரம்பான் காவல்துறை தலைமையகம் தான் விசாரணை செய்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்த ராமகிருஷ்ணன், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல காவல்துறையினரின் ஊழல்களை அம்பலப்படுத்த தன் மகன் முயன்றுள்ளதால், இவ்வழக்கை கோலாலம்பூர் தலைமையகம் தான் விசாரணை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“நெகிரி செம்பிலானைச் சேர்ந்த பல காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக என் மகன் பல புகார்களை அளித்துள்ளார். எனவே இங்கு பல பிரச்சனைகள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் இந்த வழக்கை புக்கிட் அமான் காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதால் தான் புகார் அளிக்க முன்வந்திருப்பதாகவும், தன் மகனின் உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சஞ்சீவனின் உடல்நிலையில் மாறுதல் இல்லை
‘மை வாட்ச்’ என்ற குற்றத்தடுப்பு அமைப்பின் தலைவரான சஞ்சீவன், பாகாவில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுடப்பட்டார். இச்சம்பவத்தில் அவரது விலா பகுதியில் தோட்டா பாய்ந்தது. எனினும் உயிர் பிழைத்த சஞ்சீவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
‘மை வாட்ச்’ அமைப்பின் இணைத்தலைவர் மற்றும் ஆலோசகரான கோபி கிருஷ்ணன் கூறுகையில், “சஞ்சீவனின் உடல் நிலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை. அவரால் சுயமாக மூச்சு விடமுடியவில்லை. அவருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது. விலா பகுதியில் இருக்கும் தோட்டா இன்னும் அகற்றப்படவில்லை. தற்போது அறுவை சிகிச்சை செய்தால் அதுவே சஞ்சீவனின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் போதை மருத்து கடத்தும் ஒரு நபரிடம் இருந்து சஞ்சீவன் பல முக்கியத் தகவல்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் மாதம் 30,000 முதல் 50,000 ரிங்கிட் வரை மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் காவல்நிலையத்திற்கு லஞ்சமாக கொடுத்ததாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.