கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – கோலாலம்பூர் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ 2) கட்டுமானப் பணி மிகவும் தாமதமாகிக்கொண்டே போகிறது. அது நிறைவு பெறும் நாள் தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது என்று ஏர் ஏசியா நிறுவத்தின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
மேலும், இந்த குறைந்த கட்டண விமான நிலையத்தின் கட்டுமானப் பணி நிறைவு தான் உலகின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“கேஎல்ஐஏ 2 ல் என்ன நடக்கிறதோ யாருக்குத் தெரியும்? கட்டுமானம் நிறைவு பெறும் நாள் தள்ளிக் கொண்டே போகிறது. உலகில் உள்ள மர்மங்களிலேயே மிகப் பெரியதாக இந்த கேஎல்ஐஏ2 கட்டுமானப் பணி இருக்கிறது” என்று அனைத்துலக மலேசியா நிகழ்வில் டோனி கூறியுள்ளார்.
அதோடு, இந்த தாமதம் மலேசியாவில் வெளிப்படைப் போக்கு (transparency in Malaysia) போதிய அளவில் இல்லை என்பதைக் காட்டுவதாக அரசாங்க செயல்திறன் மற்றும் மேலாண்மை விநியோகப் பிரிவு (Performance and Management Delivery Unit – Pemandu) ஏற்பாடு செய்த அந்த நிகழ்வில் டோனி கூறியுள்ளார்.
அடுத்த வருடம் மே மாதம் 2 ஆம் தேதி முதல் விமானநிலையம் இயங்க ஆரம்பித்துவிடும் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் இவ்வருடம் ஜூன் 28 தேதி அதன் தொடக்க நாள் முதல் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அதே போல், விமான நிலையத்தின் கட்டுமானப் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க கடந்த மாதம் துணை போக்குவரத்து அமைச்சர் அப்துல் அஜீஸ் கப்ராவி அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த நிகழ்வு எந்த ஒரு காரணமுமின்றி ரத்து செய்யப்பட்டது.
“யாரையாவது ஒருவரை குறை சொல்வதும், பழி போடுவதும், எதையாவது எதிர்ப்பதற்கும் ஆட்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். பொருளாதாரத்தில் நாடு முதிர்ச்சி அடைய வேண்டும்” என்றும் டோனி கூறியுள்ளார்.