Home நாடு சுப்ராவின் அறிவிப்பு தாமதத்தால், பழனிவேலுவுக்கு ம.இ.கா கிளைகளிடையே ஆதரவு பெருகுகின்றது.

சுப்ராவின் அறிவிப்பு தாமதத்தால், பழனிவேலுவுக்கு ம.இ.கா கிளைகளிடையே ஆதரவு பெருகுகின்றது.

997
0
SHARE
Ad

DR-SUBRAஆகஸ்ட் 18 – ம.இ.கா. கட்சித் தலைவருக்குப் போட்டியிடுவதா இல்லையா என்ற அறிவிப்பை வெளியிட சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மேலும் தாமதித்து வருவதால், ம.இ.கா. கிளைத் தலைவர்களிடையே நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவு பெருகி வருவதாக ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

தேசியத் தலைவருக்கான வேட்பு மனுப் பாரங்கள் வெளியிடப்பட்டு சில நாட்கள் ஆகியும் கூட சுப்ரா மௌனம் சாதித்து வருவது ம.இ.கா கிளைத் தலைவர்களிடையே அவர் தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா மீது என்பது குறித்த அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதற்கிடையில், வேட்புமனுப் பாரங்கள் வெளியான உடனேயே பழனிவேலுவுக்கு ஆதரவான தொகுதித் தலைவர்களும், முக்கிய ஆதரவாளர்களும் கிளைத் தலைவர்களைச் சந்தித்து வேட்புமனு பாரங்களில் முன் மொழிதலுக்கும், வழி மொழிதலுக்கும் கையெழுத்துக்களை வாங்கி வருகின்றனர்.

சுப்ராவின் தாமத அறிவிப்பால், பழனிவேலுவிடம் தங்களுக்கிருக்கும் நல்லெண்ணத்தையும் ஆதரவையும் கெடுத்துக் கொள்ள விரும்பாத பல கிளைத் தலைவர்கள் நமக்கேன் வம்பு என்ற ரீதியில் வேட்பு மனுப் பாரங்களில் பழனிவேலுவுக்கு ஆதரவாக கையெழுத்திட்டு வருகின்றனர்.

ம.இ.கா. தலைமையகத்தில் இன்று பழனிவேல் நேரடியாக வேட்பு மனுப் பாரங்களில் கையெழுத்திடுகின்றார்.

இன்று (18 ஆகஸ்ட்) மாலை, ம.இ.கா தலைமையகத்தில் பழனிவேல் கூட்டரசுப் பிரதேச, சிலாங்கூர் மாநில கிளைத் தலைவர்களைச் சந்தித்து நேரடியாக வேட்பு மனுப் பாரங்களில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறுகின்றது.

பல ம.இ.கா கிளைத் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, பழனிவேலுவிடம் நேரடியாக கையெழுத்து வாங்கித் தங்களின் ஆதரவைப் புலப்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வேட்பு மனுப்பாரங்களின் எண்ணிக்கைதான் தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்யும் என்பது இல்லை என்றாலும், பழனிவேல் இதுபோன்று முன்கூட்டியே எடுத்துவரும் சில அரசியல் நடவடிக்கைகளினால் சுப்ராவுக்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து வருவது ம.இ.கா வட்டாரங்களில் தெளிவாக தெரிவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொகுதி தலைவர் தெரிவித்தார்.

“சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக சுப்ரா தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தால், இன்றைக்கு நிலைமை மாறியிருக்கும். பல கிளை, தொகுதி தலைவர்கள் பகிரங்கமாக தங்களின் ஆதரவை சுப்ராவுக்கு தெரிவித்திருப்பார்கள். நானே, நேரடியாக அவரை ஆதரித்திருப்பேன். ஆனால், இப்போது கால தாமதம் ஆகிவருவருவதாலும், பழனிவேல் தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்குதலாலும், நானும் எனது தொகுதியிலுள்ள கிளைத் தலைவர்களும், பழனிவேலுவுக்கே ஆதரவாக வேட்பு மனுப் பாரங்களில் கையெழுத்திட்டு விட்டோம்” என அந்த ம.இ.கா தொகுதித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

சுப்ராவின் தாமதம், தேசியத் தலைவர் போட்டியிலிருந்து அவர் விலகி விடுவார் என்ற ஆரூடங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.