Home நாடு இன்று காலை பழனிவேலுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு! மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தேசியத் தலைவராக இருப்பேன் என்ற அறிவிப்பா?

இன்று காலை பழனிவேலுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு! மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தேசியத் தலைவராக இருப்பேன் என்ற அறிவிப்பா?

520
0
SHARE
Ad

subra-and-palaniஆகஸ்ட் 22 – இன்று காலை 11 மணியளவில் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றை ம.இ.கா தலைமையகத்தில் நடத்துகின்றார். இந்த சந்திப்பில் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பழனிவேலுவுக்கும், சுப்ரமணியத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள சமாதான உடன்பாடு பற்றிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் இதே கூட்டத்தில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தேசியத் தலைவராக நீடிப்பேன் என்ற பழனிவேலுவின் அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தேசியத் தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பழனிவேல் ஒப்புக்கொண்டதால்தான் டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கின்றார் என்ற ஆரூடங்களும் ம.இ.காவில் புறப்பட்டுள்ளது.

இந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு வருகை தரும்படி கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும், எல்லா தொகுதி காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது, பழனிவேல் தனது அறிவிப்பை எல்லா ம.இ.கா தலைவர்களின் முன்னிலையிலும் அறிவிப்பார் என்று தெரிகின்றது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு மட்டுமே தேசியத் தலைவராக இருப்பேன் என்று பழனிவேல் இன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும், அவர் அவ்வாறு கூறிவருவது வெறும் அரசியல் கண்துடைப்பு அல்ல என்பதை நிரூபிப்பதற்காகவே அவர் எல்லா ம.இ.கா தொகுதி காங்கிரஸ் தலைவர்களின் முன்னிலையிலும் தனது அறிவிப்பை செய்யவிருக்கின்றார் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் தோற்றுவித்திருக்கும் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்திற்கு, பல ம.இ.கா கிளைத் தலைவர்களும் திரளாக வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.