Home இந்தியா மக்களை பாதுகாக்கும் காவல் பணியில் சவால்கள் அதிகம்: ஜெயலலிதா பேச்சு

மக்களை பாதுகாக்கும் காவல் பணியில் சவால்கள் அதிகம்: ஜெயலலிதா பேச்சு

614
0
SHARE
Ad

சென்னை, ஆக. 24- காவல் துறையில் வீரதீர செயல் புரிந்தவர்கள், 10 ஆண்டுக்கு மேல் மெச்சத்தக்க பணி செய்தவர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் முதல்–அமைச்சர் பதக்கம் வழங்கப்படுகிறது. இதேபோல் தீயணைப்பு துறை, ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை, சிறைத் துறை, ஊர்க்காவல் படை ஆகியவற்றில் சிறந்த சேவை செய்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் முதல்–அமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான காவல் பதக்கங்கள் வழங்கும் விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, குடியரசு தலைவரின் பதக்கம் மற்றும் தமிழக முதல்–அமைச்சரின் பதக்கங்களை அணிவித்து சிறப்புரையாற்றினார்.

J.Jayalalitha_20110815அவரது சிறப்புரை வருமாறு:-

#TamilSchoolmychoice

மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தீரச் செயல், தகைசால் பணி, மெச்சத் தக்க பணி, சீர்திருத்தப் பணி, சிறப்புப் பணி, சிறந்த புலனாய்வு, விரல் ரேகை அறிவியல், சீர்மிகு பணி, தொழில்நுட்ப சிறப்புப் பணி மற்றும் பொது சேவைக்கான, சீர்மிகு பணி ஆகியவற்றில் திறம்பட செயலாற்றிய, காவல் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை மற்றும் ஊர்க்காவல் மற்றும் சமூகப் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 549 நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் இந்த இனிய விழாவில் பங்கேற்றதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

பதக்கங்களை பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மூன்றாவது முறையாக தமிழக மக்களின் பேராதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் பல்வேறு அதிகார மையங்களின் பிடியில் சிக்கிக் தவித்த காவல் துறை சுதந்திரமாக செயல்படும் வகையில் காவல் துறையினர், தங்கள் கடமைகளை ஆற்றுவதற்கு எவரும் எவ்வித குறுக்கீடும் செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தினேன்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக காவல் துறையை நவீனமயமாக்கி அதன் செயல் திறனை மேலும் வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் தொடர்ந்து எடுத்து வருகிறேன்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்புப் பணியை காவல் துறையினர் செவ்வனே மேற்கொள்ளும் வகையில் காவல் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை அவ்வப்போது நிரப்ப உத்தரவிட்டுள்ளேன். இதுவரை, 12,162 காவலர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 13,294 இரண்டாம் நிலைக் காவலர்கள், 886 உதவி ஆய்வாளர்கள், 234 தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 197 விரல் ரேகை பதிவு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 14,611 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

நாட்டு நலனுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையை வலுப்படுத்தும் வகையில் நவீன ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை வழங்குதல், ரோந்துப் பணியை அதிகப்படுத்துதல் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளையும், சீருடைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் இடர்ப் படி மற்றும் உணவுப் படியை உயர்த்தி வழங்குதல், காவல் உணவகங்கள், துயில் கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள், ஆகியவற்றை ஏற்படுத்துதல், காவல் மருத்துவ மனையை மேம்படுத்துதல், காலத்தே பதவி உயர்வு வழங்குதல், குறைந்த விலையில் பொருட்கள் பெறும் வகையில் பல்பொருள் அங்காடிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் நான் எடுத்துள்ளேன்.

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் சேவைப் பணியை நீங்கள் மேற்கொண்டு வருகிறீர்கள். வாழ்விலும், பணியிலும் முன்னேற தேவையானது சவால். தடைகள் ஏற்படும் போது தான் உத்வேகம் பிறக்கும். தடைகளை தகர்த்தெறிய முனையும் போது தான் புதிய வழிகள் பிறக்கும். சவால் தான் சாதனைக்கு வழி வகுக்கும்.

எல்லாப் பணிகளுமே, சவால்கள் நிறைந்த பணிகள் தான். இருப்பினும், காவல் பணியில் சவால்கள் சற்று அதிகமாகவே உள்ளன. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்ற இக்கால கட்டத்தில் தொழில்நுட்பம் வாயிலாக குற்றங்கள் பெருகுகிறது என்றாலும், அதே தொழில்நுட்பம் தான் குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்கவும் வழிவகை செய்கிறது.

தொழில்நுட்பம் என்கிற சவாலே சாதனை புரியவும் உதவுகிறது. பணியில் உங்களுக்கு ஏற்படுகின்ற சவால்களை எதிர்கொள்ள உங்களுக்கு தேவை துணிச்சல். துணிச்சல் என்பது தன்னம்பிக்கைக்கு மறு பெயர். அந்த துணிச்சல் இல்லையென்றால் சமயத்தில் உயிரையே காப்பாற்றிக் கொள்ள இயலாமல் போய்விடும்.

காவல் பணித் திறன் போட்டிகளில் தமிழ் நாட்டுக் காவல் துறையினர் கலந்து கொண்டு பதக்கம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத் தொகையை மிக அதிகமாக உயர்த்தி நான் வழங்கியுள்ளேன்.

பல்வேறு பதக்கங்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பதக்கப் படியினை 2011 ஆம் ஆண்டு இரு மடங்காக உயர்த்தி வழங்கினேன். காவல் துறைப் பணி என்பது ஒரு மகத்தான பணி. சமுதாயத்தில், அநீதி இழைக்கப்பட்ட மக்கள் நியாயம் கோரி, காவல் நிலையங்களுக்கு வரும் போது அவர்களை மனித நேயத்தோடு அணுகி அன்பாகப் பேசி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அதைப் பார்த்து அதற்கு காரணமான நீங்களும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். சட்டத்தின் மீதும் இந்த அரசின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. கடமையைச் செய்வதே அனைத்திலும் சிறந்தது என்பதை உணர்ந்து தன்னலம் கருதாமல் மக்கள் நலன் காக்கும் பணியில் மேலும் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சீருடைப் பணியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அல்லும் பகலும் அயராது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினர் தங்கள் கடமையினை மேலும் சிறப்புற ஆற்றும் வகையில் அவர்களுக்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று பொதுமக்களையும் இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.