Home நாடு குண்டர் கும்பல்களில் ஈடுபடுவோரில் 71 சதவீதம் இந்தியர்கள்! காவல் துறை தகவல்!

குண்டர் கும்பல்களில் ஈடுபடுவோரில் 71 சதவீதம் இந்தியர்கள்! காவல் துறை தகவல்!

650
0
SHARE
Ad

Police-Logo-featureஆகஸ்ட் 25 – நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 7 சதவீதம் மட்டுமே இருக்கும் இந்தியர்கள், குண்டர் கும்பல் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை 71 சதவீத பங்கேற்பைக் கொண்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை மலேசியக் காவல் துறை தலைமையகத்தின் குற்றவியல் பிரிவு இயக்குநர் ஹாடி ஹோ அப்துல்லா வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று நடைபெற்ற குற்றத் தடுப்பு கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றியபோது, காவல் துறையின் ஜூலை 30 வரையிலான பதிவேடுகள்படி குண்டர் கும்பல்களில் ஈடுபட்டுள்ளவர்களில் 71 சதவீதம் இந்தியர்கள் என்றும், 23 சதவீதத்தினர் சீனர்கள் என்றும், 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மலாய்க்காரர்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

காவல் துறையின் புள்ளி விவரங்களின் படி குண்டர் கும்பல்களைச் சேர்ந்த ஏறத்தாழ 40,000 சந்தேக நபர்களைத் தாங்கள், தங்களின் துப்பறிதலின் மூலம் அடையாளம் கண்டுள்ளதாகவும் ஹாடி கூறினார்.

தென் தாய்லாந்தில் அடைக்கலம்

தாங்கள் பாதுகாப்பாக மறைந்து கொள்ளும் வசதியான உறைவிடமாக தென் தாய்லாந்தை இந்த இந்தியர் குண்டர் கும்பல்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறிய அவர், அங்கிருந்து கொண்டு  மற்ற குண்டர் கும்பல்களுடன் தங்களின் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்றும் இது அவர்களின் அடுத்த கட்ட விரிவாக்கம் என்றும் தெரிவித்தார்.

விசாரணையின்றி தடுத்து வைக்கும் சட்டங்கள் இல்லாத காரணத்தால், தற்போது இந்த குண்டர் கும்பல்கள் தங்களின் அடையாளத்தின் அச்சமின்றி பகிரங்கமாகத் தெரிவிக்கும் போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் ஹாடி தனது உரையில் குறிப்பிட்டார்.

“குண்டர் கும்பல்கள் தற்போது நவீனமயமாகி, இணையத் தொடர்புகள் தங்களை பிரபலப்படுத்தி வருகின்றார்கள். பகிரங்கமாக உறுப்பினர்களை சேர்க்கின்றார்கள். அதேவேளையில் அரசு சார்பற்ற சமூக இயக்கங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள்” என்றும் ஹாடி கூறினார்.

குண்டர் கும்பல்களின் கொடூரமான ஆயுதத் தாக்குதல்களையும் நடவடிக்கைகளையும் காணொளி (வீடியோ) மூலமாகவும் ஹாடி விளக்கினார்.

தடுப்புக் காவல் சட்டம் கண்டிப்பாக தேவை

காணொளிகளை கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களிடம் காட்டியபின், காவல் துறை குற்றவியல் இயக்குநர் இதுபோன்ற மனப் போக்குடைய கடுமையான குண்டர் கும்பல் நபர்கள் இருக்கின்ற காரணத்தால் நமக்கு கடுமையான, உறுதியான சட்டங்கள் தேவை. எனவே, எங்கள் காவல் துறையின் நிலைப்பாடு என்னவென்றால் விசாரணையின்றி தடுத்துவைக்கும் தடுப்புக் காவல் சட்டங்கள் தேவை என்பதுதான் என உறுதியாகக் கூறினார்.

காவல் துறையினர் தக்க ஆதாரங்களின்றி குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுட்டுத் தள்ளுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் ஹாடி மறுத்துள்ளார்.

“எங்களின் புள்ளிவிவரங்களின் படி சந்தேக நபர்களில் 99 சதவீதத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே ஒரு சதவீதத்தினர்தான் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” என்றும் அவர் விவரித்தார்.

இந்த செய்தித் தகவலை மலேசியாகினி இணைய செய்தித் தளம் வெளியிட்டுள்ளது.