Home அரசியல் குண்டர் பிரச்சனைக்காக தடுப்புக் காவல் சட்டம் தேவையில்லை – காவல் துறையுடன் முரண்படும் அரசாங்க தலைமை...

குண்டர் பிரச்சனைக்காக தடுப்புக் காவல் சட்டம் தேவையில்லை – காவல் துறையுடன் முரண்படும் அரசாங்க தலைமை வழக்கறிஞர்!

592
0
SHARE
Ad

Gani-Patel-AG---Featureஆகஸ்ட் 25 – பெருகி வரும் குண்டர் கும்பல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு விசாரணையின்றி தடுத்து வைக்கும் தடுப்புக் காவல் சட்டங்கள் தேவை என்ற கோரிக்கைகள் காவல் துறை சார்பாக வலுத்துவரும் வேளையில், காவல் துறையினரின் கருத்தோடு தான் முரண்படுவதோடு அத்தகைய சட்டங்களுக்கு தான் இன்னும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டேல் (படம்) தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

என்னைப் பொறுத்தவரையில் தடுப்புக்காவல் சட்டங்கள் தேவையில்லை. குற்றங்களைத் தடுப்பதற்கு இப்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்பதோடு, காவல் துறையினர் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர் என்றே நான் கருதுகின்றேன். அதிலும் கடந்த ஒரு வாரமாக  அவர்கள் சிறப்பான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே, காவல்துறையினர் திறனோடு செயல்பட்டு வருவதால் மீண்டும் அவசரகால சட்டம் (Emergency Ordinance) போன்ற  தடுப்புக்காவல் சட்டங்கள் தேவையில்லை” என கனி பட்டேல் உறுதிபடக் கூறியுள்ளார்.

1969ஆம் ஆண்டு இனக் கலவரத்தினால் பிறந்த சட்டம்

அவசர காலச் சட்டம் என்பது நாடாளுமன்ற அவையின் மூலமாக அல்லாமல், நேரடியாக பேரரசரால், 1969ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் காரணமாக கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதையும் கனி பட்டேல் சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த காலக்  கட்டத்தில் இருந்த பதட்டமான சூழ்நிலை, குறைந்த எண்ணிக்கையிலான காவல் துறையினர், விசாரணை அதிகாரிகள் மற்றும் வழக்கு நடத்தும் அதிகாரிகளின் பற்றாக்குறை  போன்ற காரணங்களுக்காக இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் கனி பட்டேல் விளக்கம் அளித்தார்.

அந்த கால கட்டத்தை சற்று நினைத்துப் பாருங்கள். 1969இல் இருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை, விசாரணை அதிகாரிகள் எண்ணிக்கையை நினைத்துப் பாருங்கள். இப்போது அத்தகைய சூழ்நிலை இருக்கின்றதா? என்னைப் பொறுத்தவரையில் இல்லை. எனவே அதுபோன்ற சட்டங்களும் தேவையில்லை” என்று கனி பட்டேல் உறுதியாகக் கூறினார்.

கடந்த காலங்களில் கொடூரமான குற்றங்களை காவல் துறையினர் சிரமமின்றிக் கையாண்டுள்ளனர். உதாரணமாக, நடப்பு சட்டங்களை வைத்தே, போத்தாக் சின் என்ற பிரபலமான குண்டர் கும்பல் தலைவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி, தண்டனை வாங்கிக் கொடுத்தனர். இன்றைக்கும் நீதிமன்றங்களில் தினமும் பலர் மீது குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இந்த வழக்குகள் மீது ஆதாரங்களைத் திரட்டி விசாரணை நடத்த முடியுமென்றால், ஏற்கனவே தடுப்புக் காவலில் இருந்தவர்கள் மீதும், குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏன் குற்றம் சுமத்தி விசாரணை நடத்தமுடியாது. அதிலும் தற்போது அதிநவீன தொழில் நுட்பமும், கருவிகளும் காவல்துறை வசம் இருக்கின்றன” என்றும் கனி பட்டேல் மேலும் கூறினார்.

குற்றச் செயல்களுக்கும் விடுதலையானவர்களுக்கும் தொடர்பு இல்லை

அவசரகால சட்டத்தை அகற்றியதால்தான் குற்றச் செயல்கள் பெருகியுள்ளன என்பதற்கான போதுமான ஆதாரங்களைத் தான் இன்னும் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டிய கனி பட்டேல், முன்னாள் தடுப்புக் காவல் கைதிகளில் 263 பேர் மட்டுமே மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினரின் புள்ளி விவரங்கள் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அவசர கால சட்டம் அகற்றப்பட்டதால் மொத்தம் 1,567 பேர் விடுதலையாகினர் என்பதையும் குறிப்பிட்ட கனி பட்டேல், இதை வைத்துப் பார்க்கும் போது, குற்றம் இழைத்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றும் குறிப்பிட்டார்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஒருங்கிணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது குறித்து எந்தவித விசாரணை அறிக்கைகளையோ, ஆதாரங்களையோ தனது அலுவலகம் இதுவரை பெறவில்லை என்றும் தெரிவித்த கனி பட்டேல், பெருகி வரும் திருட்டு, கொள்ளைகள் சம்பவங்களில் கொடூரங்கள் நிகழுவதற்கும், அவசர கால சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள்தான் காரணம் என்பதற்கும் தொடர்புகள் இருப்பதாக இதுவரை காட்டப்படவில்லை என்பதையும் விளக்கினார்.

இந்த தகவல்களை மலேசியாகினி இணைய செய்தித் தளம் வெளியிட்டுள்ளது.