கோலாலம்பூர், ஆகஸ்ட் 29 – அரசாங்கத்தில் செனட்டராகப் பதவி வகிக்கும் பி.வேதமூர்த்தி, அரசாங்கம் வகுத்த பாதையில் செல்ல வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து நஜிப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசாங்க உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் அரசு வகுத்த பாதையில் பின்பற்ற வேண்டும். எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அண்மையில் பினாங்கு மாநிலத்தில் 5 இந்திய இளைஞர்கள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டது குறித்து வேதமூர்த்தி வெளியிட்ட கருத்திற்கு எதிராக உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடியும், பாதுகாப்பு அமைச்சர் ஹிசாமுடினும், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீனும் போர்கொடி தூக்கினர்.
இந்நிலையில் பிரதமர் நஜிப்பும் வேதமூர்த்தியை அரசாங்கத்தின் பாதையில் நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் துறையின் கீழ் துணைஅமைச்சராக வேதமூர்த்தியை நஜிப் நேரடியாகத் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.