ஆகஸ்ட் 29 – நமது நாட்டில் 1969ஆம் ஆண்டில் நடைபெற்ற மே 13 இனக் கலவரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மலாய்ப்படமான ‘தண்டா புத்ரா’ படத்தை பினாங்கிலுள்ள திரையரங்குகள் திரையிடக் கூடாது என பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதையும் மீறி திரையிட்டால், உள்ளூர் மாவட்ட நிர்வாகங்களின் கீழ் வருவதால் இந்த திரையரங்குகளுக்கான அனுமதி மறுக்கப்படலாம் என்றும் பினாங்கு மாநில அரசாங்கம் எச்சரித்துள்ளது.
மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கின்றது என்றும், பொது மக்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் விதத்தில் இந்தப்படம் இல்லை என்ற காரணத்தாலும் இந்தப் படத்திற்கு தடை விதிப்பதாக பினாங்கு அரசாங்கம் கூறியிருக்கின்றது.
பினாங்கு அரசின் முடிவைத் தொடர்ந்து, பினாங்கிலுள்ள தனது திரையரங்குகளில் இந்த படத்தைத் திரையிடப் போவதில்லை என நாட்டின் மிகப் பெரிய திரையரங்கு உரிமையாளரான கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் நிறுவனம் அறிவித்து விட்டது.
தண்டா புத்ரா படத்தின் இயக்குநரின் எச்சரிக்கை
இதற்கிடையில் தண்டா புத்ரா படத்தின் பெண் இயக்குநர் சுகைமி பாபா படத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கருத்துரைக்கும்போது, இந்தப்படம் கட்டாயம் திரையிடப்பட வேண்டும் என்ற பிரிவில், ஃபினாஸ் எனப்படும் தேசிய திரைப்படக் கழகம் வெளியிட்டுள்ளதால், படத்தை திரையிட மறுக்கும் திரையரங்குகளின் அனுமதிகள் ரத்து செய்யப்படலாம் என எச்சரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திரையரங்கு உரிமையாளர்களுக்கு இருபக்கமும் இடி விழுந்த நிலையாகிவிட்டது.
ஆனால், பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங்கோ, மாநில அரசாங்கம் ஆலோசனை மட்டுமே வழங்கியது என்றும் மாறாக படத்திற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கின்றார்.
பினாங்கில் திரையரங்குகளைக் கொண்டிருக்கும் டிஜிவி நிறுவனம் இந்த படத்தை திரையிடுவதா இல்லையா என்ற முடிவை இன்னும் தாங்கள் எடுக்கவில்லை என அறிவித்துள்ளது. லோட்டஸ் நிறுவனமோ, பினாங்கு மாநில அரசின் முடிவை முன்னிட்டுத் தாங்கள் இந்தப் படத்தைத் திரையிடப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
இவ்வாறாக, தண்டா புத்ரா படம் அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு பினாங்கில் திரையீடு காண முடியாமல் முடங்கிக் கிடக்கின்றது.